சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் தொன்மையான கோயில்களை பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான மாநில அளவிலான வல்லுநர் குழு கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில், திருப்பணி இணை ஆணையர் பொ.ஜெயராமன், தலைமை பொறியாளர் கே.தட்சிணாமூர்த்தி, ஆகம வல்லுநர் குழு உறுப்பினர் கோவிந்தராஜ பட்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் வெங்கடாஜலபதி கோயில், உப்புக்கோட்டை செல்லாண்டியம்மன் கோயில், தூத்துக்குடி மாவட்டம், கிளவிப்பட்டி விநாயகர் கோயில், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி, இசக்கி அம்மன் கோயில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, பொன்னியம்மன் கோயில், ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி மத்தியபுரீஸ்வரர் கோயில் உட்பட 135 கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு மாநில அளவிலான வல்லுநர் குழு கூட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இக்குழுவின் பரிந்துரைப்படி, கோயில்களில் திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கும்.