தமிழகத்தில் கடந்த மே 15ம் தேதி தொடங்கிய 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 28ம் தேதி வரை நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சரியாக நடைபெறாமல் இருந்த பள்ளிகள் மற்றும் தேர்வுகள் இந்த ஆண்டு சரிவர நடத்தப்பட்டது. இந்த ஆண்டு 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 மாணவர்களும், 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 மாணவிகளும் என மொத்தமாக 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். மொத்தம் 3,119 தேர்வு மையங்களில் இந்த ஆண்டு தேர்வு நடைபெற்றது.
இந்நிலையில் ஜூன் 20ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளும் அன்றைய தினமே வெளியானது. 12-ம் வகுப்பில் மொத்தம் 93.76 சதவிகித பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர். தேர்வு எழுதிய மொத்த மாணவர்களில் மாணவியர் 96.32%, மாணவர்கள் 90.96% தேர்ச்சி அடைந்தனர்.
தற்போது அரசு தேர்வுத்துறை அலுவலகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் +2 பொதுத்தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உள்பட) பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல் வரும் 15ம் தேதி முதல் வழங்கப்படும். இதனை பள்ளிகளிலும், தேர்வு மையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு: www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தை பார்வையிட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.