1950 -களில் பத்திரிக்கைத் தொடராக வெளிவந்து இன்றளவும் எல்லோராலும் விரும்பிப் படிக்கப்படும் அமரர் கல்கியின் புகழ் பெற்ற ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு திரைப்படமாக்கி இருக்கிறார் மணிரத்தினம். இதில் கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம், ஜெயராம் உட்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. செப். 30-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது. கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற பல நடிகர்கள் இப்படத்தில் நடிக்க ஆசைப்பட்டதாக படத்தின் இசை வெளியீட்டு விழாவில் குறிப்பிட்டிருக்கின்றனர். இதனிடையே இரண்டு முறை, மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்ற நடிகை அமலா பால் அதனை தான் நிராகரித்துள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்.

சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அமலா பால் அந்த வாய்ப்பை நிராகரித்ததற்கானக் காரணத்தை தெரிவித்துள்ளார்.
“சில வருடங்களுக்கு முன்பு ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்காக மணிரத்னம் சார் என்னை அழைத்தார். நான் அவர் ரசிகை என்பதால் உற்சாகமாக ஆடிஷனில் கலந்துகொண்டேன். ஆனால், அப்போது அந்தப் படம் தொடங்கப்படவில்லை. இதனால் ஏமாற்றமும் வருத்தமும், அடைந்தேன். பின்னர் 2021-ம் ஆண்டு அதே படத்துக்காக அவர் என்னை அழைத்தபோது நான் நடிக்கும் மனநிலையில் இல்லை. அதனால் மறுத்துவிட்டேன், இதற்காக நான் வருந்தவில்லை என்றும், ஏனென்றால் சில விஷயங்கள் நியாயமாகவும் சரியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறியிருக்கிறார்.