சென்னை பகுதியில் உள்ள ஒரு வயதான தம்பதி ஹைதராபாத்தில் வேலை செய்யும் தனது மகனை இரண்டு நாட்களாக செல்போனில் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து, பெங்களூரில் இருக்கும் தனது உறவினரின் உதவியை அந்த வயதான தம்பதி நாடியுள்ளனர்.
அந்த உறவினர் பெண்மணி தனது மகனிடம் இதுகுறித்து தெரிவித்ததை தொடர்ந்து மகன் சாய் கிரண் அவர்களுக்கு உதவ முன் வந்தார். அதன்படி, அந்த தம்பதியின் மகன் வசிக்கின்ற இருப்பிடத்தின் முகவரியை கேட்டு வாங்கி ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து அந்த முகவரிக்கு அனுப்பியுள்ளார்.
அந்த உணவை அவர்கள் பெற்றுக் கொண்டால் டெலிவரி பாய் மூலமாக தொடர்பு கொள்ளலாம் என்று எண்ணியுள்ளார். அதன்படி, swiggy நிறுவனத்தில் ஆர்டர் செய்த உணவை ஸ்ரீ நாத் ஸ்ரீகாந்த் என்ற டெலிவரி பாய் குறிப்பிட்ட முகவரிக்கு எடுத்துக் கொண்டு சென்றுள்ளார்.
ஆனால், அவர்களால் அந்த மகனை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனை தொடர்ந்து முகவரி தவறாக இருக்கிறது என்று டெலிவரி பாய் சாய் கிரணிடம் தெரிவித்துள்ளார். பின்னர் சாய் கிரண் சரியான முகவரியை வயதான தம்பதிகளிடமிருந்து பெற்று கொண்டு டெலிவரி பாய்க்கு கால் செய்து இந்த முகவரியில் டெலிவரி செய்யுங்கள் என்று கேட்டு தாங்கள் நிலவரத்தை எடுத்துக் கூறியுள்ளார்.
இதனால் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்த டெலிவரி பாய் சரியான முகவரியை எடுத்துக்கொண்டு அந்த முகவரிக்கு சென்ற போது அங்கே அவர்களின் மகன் விபத்தில் சிக்கி உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். இதனை தொடர்ந்து உங்கள் பெற்றோர் உங்களை தொடர்பு கொள்ள முடியாமல் தவிப்பதாக கூறி நடந்த அனைத்து விஷயங்களையும் அந்த டெலிவரி பாய் எடுத்துச் சொல்லியுள்ளார்.
இதனால் வருத்தம் அடைந்த அந்த மகன் மன்னிப்பு கேட்டுவிட்டு தனது பெற்றோரிடம் பேசியுள்ளார். தான் விபத்தில் சிக்கியதாகவும், இது உங்களுக்கு தெரிந்தால் நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்று மறைத்து விட்டதாகவும், அந்த மகன் மன்னிப்பு கேட்டார்.
இது குறித்து அவர்களுக்கு உதவிய சாய்க்கிரன் அந்த ஸ்விக்கி டெலிவரி பாய் ஸ்ரீ நாத் ஸ்ரீ காந்தை பாராட்டி சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை ஸ்விக்கி நிறுவனம் ரீட்வீட் செய்து இருக்கிறது. இதனை தொடர்ந்து அந்த டெலிவரி பாய் ஸ்ரீகாந்த் ஸ்ரீநாத்துக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.