போபால்: ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் விபத்தில் சிக்கியவரை ஜேசிபி வாகனத்தில் தூக்கிச் சென்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்தது. மத்திய பிரதேச மாநிலம் கட்னி மாவட்டத்தில் விபத்தில் சிக்கிய ஒருவரை, ஜேசிபி வாகனம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது. அந்த வீடியோவில், சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் வராததை அடுத்து, விபத்தில் சிக்கிய அந்த இளைஞனை ஜேசிபி வாகனம் மூலம் அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். ஜேசிபி-யின் மண் அள்ளும் பகுதியில் அந்த இளைஞரை படுக்க வைத்து, அந்த வாகனத்தில் கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அந்த இளைஞனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி பிரதீப் முதியா கூறுகையில், ‘பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கிய இளைஞன் படுகாயத்துடன் விழுந்து கிடந்துள்ளார். ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் வருவதற்கு தாமதமானதால், அவரை ஜேசிபி வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். இளைஞனின் காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது’ என்றார். இதுபோன்ற சம்பவங்கள் மத்திய பிரதேசத்தில் நடப்பது முதன்முறை அல்ல; ஏற்கனவே கடந்த மாதம் ஏற்பட்ட கடும் வெள்ளத்தின் போது சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் வராததையடுத்து, கர்ப்பிணியை ஜேசிபியில் ஏற்றிச் செல்லும் காட்சியும் இதேபோல் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.