தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான வசந்தபாலன், சிம்புதேவன் மற்றும் அறிவழகன் ஆகிய 3 இயக்குநர்களும், இயக்குநர் ஷங்கரிடம் இணை இயக்குநர்களாக ‘இந்தியன் 2’ படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், தந்தை – மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்து, கடந்த 1996-ம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குநர் ஷங்கர் திட்டமிட்டு, கடந்த 2019-ம் ஆண்டு முதல் படப்பிடிப்பும் நடத்தப்பட்டது. இதில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வந்தார். லைகா புரொடெக்ஷன்ஸ் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.
படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தநிலையில், படப்பிடிப்பில் ஏற்பட்ட கிரேன் விபத்து, கொரோனா ஊரடங்கு, இயக்குநர் ஷங்கருக்கும், தயாரிப்பு நிறுவனம் லைகாவிற்கும் இடையேயான கருத்து வேறுபாடு உயர்நீதிமன்றம் வரை சென்றது ஆகிய பிரச்சனைகளால் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு நின்று போனது. இதற்கிடையில், கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ படத்தில் நடிக்க ஆரம்பித்து, படம் ரீலிசாகி 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை ஈட்டியது.
இயக்குநர் ஷங்கர் தெலுங்கில் ராம்சரணை வைத்து ‘ஆர்.சி 15’ படத்தை இயக்க சென்று, கிட்டத்தட்ட படப்பிடிப்பு பாதி முடிவடைந்த நிலையில் உள்ளது. மேலும் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வந்த விவேக், நெடுமுடி வேணு ஆகியோர் கடந்த வருடம் உயிரிழந்து விட்டனர். இதனால் ‘இந்தியன் 2’ படம் மீண்டும் தொடங்கப்படுமா எனப் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
பல்வேறு காரணங்களால் முடங்கியிருந்த ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு சுமூக பேச்சுவார்த்தைக்குப் பின், ஒருவழியாக கடந்த மாதம் 24-ம் தேதி பூஜையுடன் மீண்டும் துவங்கியது. ‘இந்தியன் 2’ மற்றும் ‘ஆர்.சி 15’ ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பும் மாறி மாறி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஷங்கரின் சிஷ்யர்களும், பிரபல இயக்குநர்களுமான வசந்தபாலன், சிம்புதேவன் மற்றும் அறிவழகன் ஆகிய 3 பேரும் ‘இந்தியன் 2’ படத்தில் இணை இயக்குநர்களான பணியாற்ற உள்ளனர். ஷங்கருக்கு உறுதுணையாக இருப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த சிம்புதேவனின் அறிமுகப்படமான ‘இம்சை அரசனின் 23-ம் புலிகேசி’ படத்தை, ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தான் தயாரித்திருந்தது. அதேபோல் அறிவழகனின் அறிமுகப்படமான ‘ஈரம்’ படமும், வசந்தபாலனின் ‘வெயில்’ படமும், ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.