இந்தி மொழி குறித்தப் பேச்சுக்கள் எழும்போதெல்லாம், இந்தித் திணிப்பு என மத்திய அரசுமீது, பல்வேறு மாநிலங்களிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்தவண்ணமே இருக்கினறன். இதில் அரசியல் தாண்டி சினிமா பிரபலங்களும் அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தி குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.
`இந்தி திவாஸ்’ தினத்தையொட்டி குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, “நமது கலாசாரம் மற்றும் வரலாற்றின் ஆன்மாவைப் புரிந்துகொள்ள அலுவல் மொழியான இந்தியைக் கற்றுக்கொள்ள வேண்டும்” எனப் பேசியிருந்தார்.
இந்த நிலையில், இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினும் எதிர்க்கருத்து தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து பேசிய ஸ்டாலின், “இந்தி சட்டப்படியான தேசிய மொழியும் அல்ல, ஆட்சி மொழியுமல்ல. இந்திய அரசின் அலுவல் மொழியாகத்தான் இந்தி இருக்கிறது. அதேபோல இணை அலுவல் மொழியாக ஆங்கிலம் உள்ளது. இதில், மத்திய உள்துறை அமைச்சர், இந்தியை உயர்த்திப்பிடிப்பதற்காக, உள்ளூர் மொழிகளையும் சேர்த்துக்கொண்டுப் பேசியிருக்கிறார். அவரின் கருத்து, பல மொழிகளைப் பேசும் மக்களைக்கொண்ட இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற பண்பாட்டுக்கு எதிரானது.
அதுமட்டுமல்லாமல் இந்தியாவின் வரலாறும், பண்பாடும் இந்தி மொழியில் புதைந்திருக்கவில்லை. அதோடு அலுவல் மொழியான இந்தியின் ஆதிக்கத்திலிருந்து, தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் தனித்தன்மைமிக்க மொழிகளைக் காப்பதற்காக அரசியல் சாசன சட்டத்தின்வழியே போடப்பட்ட வேலைதான் இணை அலுவல் மொழிதான் ஆங்கிலம் என்பது. இது ஒருமைப்பாடுமிக்க இந்தியா, இதனை `இந்தி’யா எனப் பிளவுபடுத்தப் பார்க்கும் முயற்சிகள் வேண்டாம். மேலும், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை அலுவல் மொழிகளாக்கி, இந்தி தினத்துக்குப் பதில் இந்திய மொழிகள் நாள் எனக் கொண்டாடப்படவேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.