இந்தியா இந்துக்களின் நாடு, ஆ ராசா கருத்து ஏற்புடையது அல்ல: பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக கட்சி தொடங்கப்பட்டு 17 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று 18 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தேமுதிகவின் கட்சி கொடியினை ஏற்றி 500 நபர்களுக்கு இலவச தண்ணீர் குடம் மற்றும் புடவை வழங்கினார். 

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தேமுதிக 18 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி இன்று தமிழ்நாடு முழுவதும் கட்சித் தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று தலைமை அலுவலகத்தில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் கொடுத்து கட்சியின் துவக்க நாளை தொண்டர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

விழுப்புரத்தில் இன்று முப்பெரும் விழா நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து வரும் 18ஆம் தேதி தாம்பரத்தில் கொண்டாடப்பட உள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை காரணமாக கட்சியில் சிறிது தொய்வு உள்ளது. ஆனால், எந்த நோக்கத்திற்காக கட்சி உருவாக்கப்பட்டதோ அதை நோக்கி தொடர்ந்து கட்சி பயணித்து வருகிறது.

தேமுதிகவில் உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. அது முடிந்ததும் செயற்குழு பொதுக்குழு நடத்தப்படும். வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக தேமுதிக தயாராகி வருகிறது. யாருடன் கூட்டணி என்பது குறித்து முடிவெடுக்க தற்பொழுது சரியான நேரமில்லை. இன்னும் தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகள் உள்ளதால், தற்போது கட்சியின் வளர்ச்சி குறித்து பணிகள் நடைபெற்று வருகின்றன.  உரிய நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும். 

அதே போல் தேமுதிக யாருடன் கூட்டணியில் இருக்கிறது என்பதனை தேமுதிக தான் அறிவிக்கும். கூட்டணி கட்சிகள் அல்ல.’ என்றார்.

இந்து மதம் தொடர்பாக அண்மையில் திமுக எம்பி ஆ.ராசா கூறிய கருத்திற்கு பதில் அளித்த பிரேமலதா, இது இந்துக்கள் நாடு தான்.  தேமுதிக எந்த ஒரு ஜாதி மத பாகுபாடு இன்றி மக்களின் நன்மைக்காக உருவாக்கப்பட்ட கட்சி என கூறினார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.