இந்துக்களை வெளியேற்றும் வக்பு போர்டு சிஇஓ.! சஸ்பெண்ட் செய்து கைது செய்ய எச்.ராஜா வலியுறுத்தல்.!

இந்துக்களை அவர்களின் சொந்த மண்ணில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வக்பு போர்டு சிஇஓ ரபியுல்லாவை சஸ்பெண்ட் செய்வதுடன் கைது செய்ய வேண்டும் என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் ஜீயபுரத்தையடுத்த திருச்செந்துறை சந்திரசேகர சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பா.ஜ.க. மூத்த தலைவர் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம், அரசங்குடி, கும்பக்குடி, கடியாக்குறிச்சி, கிளியூர், திருச்செந்துறை, கோமாகுடி உள்ளிட்ட 22 கிராமங்கள் மற்றும் திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட புத்தூர், தென்னூர் ஆகிய பகுதிகளில் உள்ள 25,500 ஏக்கர் பரப்பளவில் வசிக்கும் இந்துக்களின் சொத்துக்களை கொள்ளையடிக்கும் முயற்சியில் வக்பு வாரிய தலைமை செயல் அலுவலர் ஈடுபட்டுள்ளதாகவும், இங்கு நடப்பது திமுக ஆட்சியா? அல்லது மாலிக்காபூர் ஆட்சியா? என்ற சந்தேகம் எழுவதாகவும் தெரிவித்தார். 

மேலும், இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில்கள் மற்றும் கோயில் நிலங்கள் குறித்து சட்டமன்றத்தில் அமைச்சர் சேகர் பாபு ஒரு நீண்ட பட்டியலை வாசித்ததாகவும், அந்த பட்டியலின் அடிப்படையில் இந்து கோவில்களுக்கு சொந்தமான சொத்து விவரங்களை முழுமையாக சேகரித்து, சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அமைச்சர் சேகர் பாபு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த நிலங்கள் அனைத்தும் இந்து சமய அறநிலைக்கு சொந்தமான நிலங்கள் என தகவல் பலகையில் ஒட்டி வைத்திருக்க வேண்டும் எனவும், 15 தினங்களுக்குள் அமைச்சர் சேகர் பாபு இதனை செய்யவில்லை என்றால் உணர்வுள்ள இந்துக்கள் ஒன்று கூடி தொடர் போராட்டங்களை முன்னெடுப்பார்கள் என்றும் எச். ராஜா தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆண்டாண்டு காலமாய் இந்த கிராமங்களில் வசித்து வரும் இந்துக்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வக்பு போர்டு சிஇஓ ரபியுல்லாவை சஸ்பெண்ட் செய்வதுடன் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேற்சொன்ன பகுதிகளில் உள்ள 25,500 ஏக்கர் நிலம் வக்பு வாரியத்திற்கு சொந்தமான நிலம் எனவும், இந்தப் பகுதியில் பத்திரப்பதிவு செய்ய கூடாது என பத்திர பதிவு துறைக்கு வக்பு வாரியம் தெரிவித்திருப்பதும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஏற்கனவே போராட்டம் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.