புதுச்சேரி: இரட்டை குடியுரிமை பிரச்னைக்கு செக் வைக்கும் வகையில் எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், ஆயுர்வேத படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு தனியாக உறுதிமொழி படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜிப்மர் மருத்துவக் கல்லுாரி மற்றும் புதுச்சேரி மருத்துவக் கல்லுாரிகளில் ‘சென்டாக்’ மூலம் நிரப்பப்படும் அரசு ஒதுக்கீட்டு இடங்களை, இரட்டை குடியுரிமை பெற்றுள்ள மாணவர்கள், அபகரித்து வருவதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு உள்ளது.
இதுபோன்று பிற மாநில மாணவர்கள் சீட்டுகளை பறிப்பதை தடுக்க தமிழ்நாடு, பஞ்சாப், ஹரியானா, சண்டிகார் உள்ளிட்ட பல மாநிலங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. அது பற்றி மாணவர் சேர்க்கை குறிப்பேட்டில் தெளிவாக குறிப்பிட்டு உள்ளன. ஆனால் சென்டாக் தகவல் குறிப்பேட்டில் இரட்டை குடியுரிமை தொடர்பாக எந்த விதிமுறைகளும் குறிப்பிடப்படவில்லை.
அதனால் புதுச்சேரி மாணவர்களின் சீட்கள் பறிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்படையிலான மாணவர் சேர்க்கையில், இரட்டை குடியுரிமை பிரச்னைக்கு இந்தாண்டு அதிகரிகள் ‘செக்’ வைத்துள்ளனர்.
இதுகுறித்து மாணவர்களிடம் தனியாக உறுதிமொழி படிவம் பெற சென்டாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, அதற்கான படிவத்தை வெளியிட்டுள்ளது.அந்த படிவத்தில், ‘பிற மாநிலங்களில் குடியுரிமை பெற்றிருக்கவில்லை; பிற மாநிலங்களில் மருத்துவ சீட் பெற விண்ணப்பிக்க வில்லை. தவறான, பொய்யான தகவல்களை தருவதன் மூலம், கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறிந்துள்ளேன்’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்த உறுதிமொழி படிவத்தினை எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், ஆயுர்வேதம் உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் டவுன்லோடு செய்து, பூர்த்தி செய்ய வேண்டும். அதில், எக்ஸிகியூட் மாஜிஸ்திரேட் அல்லது நோட்டரி முன்னிலையில் 20 ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டி, கையொப்பமிட்டு விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இரட்டை குடியுரிமை சம்பந்தமாக, கடந்தாண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப் பட்டது. இவ்வழக்கினை விசாரித்த ஐகோர்ட், சில குறைபாடுகளை சுட்டிக்காட்டி இருந்தது. அதையடுத்து, தற்போது இந்த அதிரடி நடவடிக்கையை சென்டாக் துவக்கி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement