கீவ்: உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி முதல் ராணுவ தாக்குதலை தொடர்ந்திருக்கும் ரஷ்யா, அந்நாட்டில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அந்நாட்டுடனான கடும் சண்டைக்கு பிறகு கார்கிவ் நகரத்தை உக்ரைன் மீட்டிருக்கிறது.
இந்நிலையில் இந்த பின்னடைவை எதிர்கொள்ள முடியாத ரஷ்ய ராணுவ படையினர், தங்கள் நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதலை தொடுத்துள்ளதாக உக்ரைன் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து உக்ரைனில் முன்னேறி வரும் ரஷ்யாவுக்கு இந்த குற்றச்சாட்டு பெரும் அவதூறாக பார்க்கப்படுகிறது.
பின்னணி
நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு சம்மதம் தெரிவித்த நிலையில், அமெரிக்காவும் ரஷ்யாவுக்கும் இருந்த உரசல் உக்ரைன் மூலமாக போராக வெடித்தது. கடந்த 1991க்கு பிறகு சோவியத் யூனியன் உடைந்ததையடுத்து அதன் உடன் இருந்த நாடுகள் தங்களை சுதந்திர நாடுகளாக அறிவித்துக்கொண்டன. குறிப்பாக உக்ரைன் இந்த அறிவிப்பை வெளியிட்டது சர்வதேச நாடுகளிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால் இதன் பின்னர் நடந்த சம்பவங்கள் ரஷ்யாவை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.
சண்டையாக மாறிய போட்டி
சோவியத் யூனியன் இருந்த காலத்தில் அமெரிக்காவின் நேட்டோ படைகள் சோவியத்திற்கு எதிராக உலக நாடுகளை திரட்டும் பணியில் ஈடுபட்டது. ஏனெனில் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வர சோவியத்தே மிகப்பெரும் காரணமாக இருந்தது. மட்டுமல்லாது விண்வெளி போட்டியில் சோவியத்தான் உலகின் முன்னோடி. இதெல்லாம் அமெரிக்காவுக்கும் சோவியத்துக்கும் இடையில் பெரும் போட்டியையும் பகையையும் வளர்த்தது. அது தற்போது உக்ரைன் வரை நீண்டு வந்துள்ளது.
விரிவுபடுத்தப்படும் நேட்டோ
இப்படி நேட்டோ படைகள் உலக நாடுகளை திரட்டும் பணியில் ஈடுபட அதனை எதிர்த்து ‘வர்சா’ கூட்டமைப்பை சோவியத் ஏற்படுத்தியது. இது அமெரிக்காவுக்கு சரியான பயத்தை ஏற்படுத்திய நிலையில் கிழக்கே நேட்டோவின் ஆதிக்கத்தை விரிவாக்க மாட்டோம் என அமெரிக்கா உறுதியளித்தது. இதனையடுத்து வர்சா கலைக்கப்பட்டுவிட்டது. ஆனால் சோவியத் யூனியனே கலைந்த பின்னர் நேட்டோ தனது அதிகார எல்லையை மேலும் விரிவுபடுத்த துணிந்தது.
பதட்டத்தை ஏற்படுத்தும் நேட்டோ
இதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. இந்நிலையில், ரஷ்யாவின் அண்டை நாடுகளை நேட்டோவில் இணைய அமெரிக்கா தொடர்ந்து வற்புறுத்தி வந்த நிலையில் சில நாடுகள் அதனை ஏற்றுக்கொண்டன. இறுதியாக இருப்பது உக்ரைன் மட்டும்தான். இந்நாட்டை நேட்டோவில் இணைத்துவிட்டால் பின்னர் நேட்டோவின் படைகள் அங்கு தளம் அமைத்து பயிற்சியை மேற்கொள்ளும். இது ரஷ்யாவுக்கு தேவையில்லாத பதட்டம். எனவே உக்ரைனின் இந்த முடிவை எதிர்த்து ரஷ்யா ராணுவ நடவடிக்கையை தொடங்கியது.
சோதனைக்களமாகிய போர்க்களம்
பெயர் என்னமோ ராணுவ நடவடிக்கைதான். ஆனால் இது உக்ரைன் மீதான போராகத்தான் நீடித்து வருகிறது. போரில் இரு பக்கமும் பலத்த அடி இருந்தாலும் ரஷ்யா தொடர்ந்து முன்னேறி வந்தது. இதை தாக்குப்பிடிக்க முடியாமல் உக்ரைன் தனது முக்கிய நகரங்களை இழந்து வந்தது. குறிப்பாக கார்கிவ். ஆனால் இந்த தோல்விக்கு பிறகு அமெரிக்கா அதிக அளவில் உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை செய்ய தொடங்கியது. அதிநவீன ஆயுதங்கள் இந்த போர்க்களத்தில் பரிசோதித்துப் பார்க்கப்பட்டன.
ஜாக்பாட்
அமெரிக்கா கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து சுமார் 13.5 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.1.07 லட்சம் கோடி) அளவு ராணுவ உதவிகளை உக்ரைனுக்கு செய்துள்ளது. இது ரஷ்யாவின் ஓராண்டுக்கான ராணுவ பட்ஜெட் தொகையில் பாதி என்று சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு ரஷ்யா தனது ராணுவத்திற்கு 26.4 பில்லியன் அமெரிக்க டாலர் அளவு நிதியை ஒதுக்கியிருந்தது. உக்ரைனுக்கு கிடைத்துள்ள இந்த ஜாக்பாட் மூலம் தற்போது கார்கீவ் நகரம் ரஷ்ய ராணுவ கட்டுப்பாட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
ஆறு மாதங்களுக்கு பிறகு
இந்த உதவியில் வான்வெளி தாக்குதல் எதிர்ப்பு உள்ளிட்ட எதிர்ப்பு ஆயுதங்களைதான் முதலில் அமெரிக்கா வழங்கியதாக பென்டகன் அறிக்கை கூறுகிறது. ஆனால் போரின் தன்மை சாதகமாக அமைந்த பின்னர் அதிநவீன தாக்குதல் ஆயுதங்களை தாங்கள் வழங்கியுள்ளதாக பென்டகன் கூறியுள்ளது. இதன் காரணமாக ஏறத்தாழ 6 மாதங்களுக்கு பின்னர் கார்கீவ் நகரம் உக்ரைன் வசம் வந்துள்ளது. ஆனால் இதன் பின்னர் வான்வெளி தாக்குதல் நடத்தப்படலாம் என்று அச்சம் நிலவுவதாக உக்ரைன் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.