பிசிசிஐ தலைவர் அல்லது செயலாளர் பொறுப்பில் உள்ளவர்கள் ஒருமுறைக்கு மேல் மறுமுறை உடனடியாக தொடரமுடியாது என்ற விதியில் திருத்தம் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மாநில கிரிக்கெட் சங்கம் மற்றும் பிசிசிஐ ஆகியவற்றின் தலைவராகவும் செயலாளராகவும் பொறுப்பு வகிப்பவர்கள் மூன்றாண்டுகளுக்கு பிறகு மீண்டும் போட்டியிட முடியாது என்பது தற்போதுள்ள விதி.
இதனை மாநில அளவில் இரண்டு முறையும் அகில இந்திய அளவில் இரண்டு முறையும் தொடர்ந்து முக்கிய பொறுப்பு வகிக்கும் வகையில் திருத்தம் செய்ய அனுமதித்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், ஒருவர் ஒருமுறை மட்டுமே அதாவது மூன்றாண்டுகள் மட்டுமே பதவியில் இருக்க முடியும் என்பது மிகவும் கடுமையான விதியாக உள்ளது அதனால் இதனை இரண்டு முறை தொடர்ந்து செயல்பட வழிவகை செய்துகொள்ளலாம் என்று கூறியுள்ளது.
இதன் மூலம், 2013 முதல் 2019 வரை குஜராத் மாநில கிரிக்கெட் சங்க செயலாளராகவும் தற்போது பி.சி.சி.ஐ. செயலாளராகவும் உள்ள ஜெய் ஷா 2022 செப்டம்பர் மாதம் தனது பதவி காலம் முடியும் போது மீண்டும் போட்டியிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதே வேளையில், தலைவராக இருக்கும் சவுரவ் கங்குலி இந்த மாதம் தனது மூன்றாண்டு பதவிக் காலம் முடிந்ததும் தொடரமுடியுமா என்பது மாநில சங்ககளிடையே அவருக்கு உள்ள செல்வாக்கைப் பொறுத்தே உள்ளது என்று கூறப்படுகிறது.
மேலும், அமைச்சர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மட்டுமே பொது ஊழியர்கள் என்ற வரம்புக்குள் வருவார்கள் என்றும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இது பொருந்தாது என்றும் கூறியுள்ளது.