எலெக்ட்ரிக் பைக் ஷோரூமில் தீ விபத்து சென்னையை சேர்ந்த 2 பேர் உட்பட 8 பேர் கருகி பலி

திருமலை: ஷோரூமில் சார்ஜ் போட்டிருந்த எலெக்ட்ரிக் பைக் தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் பரிதாபமாக இறந்தனர். 14 பேர் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தெலங்கானா மாநிலம், செகந்திராபாத் ரயில் நிலையம் அருகே 5 மாடி கட்டிடத்தின் கீழ் தளத்தில் எலெக்ட்ரிக் பைக் ஷோரூம் உள்ளது. இதன் மேல்மாடியில் லாட்ஜ் உள்ளது. நேற்று முன்தினம் இரவு ஷோரூமில் சார்ஜ் போடப்பட்டிருந்த எலெக்ட்ரிக் பைக் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால், அங்கு நிறுத்தி இருந்த 23 பைக்குகளும் தீப்பிடித்து எரிந்து, மேல் தளத்தில் உள்ள லாட்ஜூக்கும் தீ பரவியது. தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர், லாட்ஜில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர்.

இந்த தீ விபத்தில் லாட்ஜில் தங்கியிருந்த 7 பேர் உடல் கருகிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டனர். அதேபோல், தீ விபத்தில் சிக்கியும், மாடியில் இருந்து குதித்தும் படுகாயமடைந்த 14 பேர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை ஒரு பெண் இறந்தார். மேலும், 5 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இறந்தவர்களில் விஜயவாடாவைச் சேர்ந்த ஹரிஷ், டெல்லியை சேர்ந்த வீரேந்தர், சென்னை சேர்ந்த சீதாராமன் (48), பாலாஜி (42) ஆகியோர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

சென்னையை சேர்ந்த இருவரும் வியாபார நிமித்தமாக செகந்திராபாத் வந்து விடுதியில் தங்கி இருந்தபோது தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தனர். பைக் ஷோரூமில் 40 எலெக்ட்ரிக் பைக், 5 கேஸ் சிலிண்டர்கள், ஜெனரேட்டர் மற்றும் பெட்ரோல் பைக் இருந்ததால், தீயில் அவை வெடித்தன. இதனால், தீ வேகமாக பரவியதோடு புகை பரவியதற்கு முக்கிய காரணமாக தெரிகிறது. லாட்ஜ் சீல் வைக்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் ஷோரூம் உரிமையாளர் ரஞ்சித் சிங் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

*மோடி ரூ.2 லட்சம்; கேசிஆர் ரூ.3 லட்சம்
இந்த தீ விபத்தில் பலியான 8 பேரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இறந்தவர்களுக்கு தலா  ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரண உதவி அறிவித்துள்ளார்.  இதேபோல், இறந்தவர்களுக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் (கேசிஆர்) தலா ரூ.3 லட்சம் வழங்கியுள்ளார். பார்க்கிங் பகுதியில் ஷோ ரூம் லாட்ஜியின் கார் பார்க்கிங் பகுதியில், எலெக்ட்ரிக் பைக் ஷோரூம் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டு, நடத்தப்பட்டு வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது பற்றி விசாரணை நடத்தப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.