சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, சி.விஜயபாஸ்கர் மீது புதிய ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில், அவர்களது வீடுகள் உட்பட தமிழகம் முழுவதும் 44 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனை மேற்கொண்டனர். இதில் ரூ.51 லட்சம் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சராக பதவி வகித்தவர் எஸ்.பி.வேலுமணி. தற்போது தொண்டாமுத்தூர் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.
அமைச்சராக எஸ்.பி.வேலுமணி பதவி வகித்தபோது, கிராமங்களில் உள்ள தெரு விளக்குகள், எல்இடி விளக்குகளாக மாற்றப்பட்டன. இத்திட்டத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடு செய்து, தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு விதிகளுக்கு மாறாக ஒப்பந்தப்பணி வழங்கிய வகையில், அரசுக்கு சுமார் ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக எஸ்.பி.வேலுமணி மீது புகார் எழுந்தது.
அதன்பேரில், எஸ்.பி.வேலுமணி, சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தை சேர்ந்த கேசிபி இன்ஜினீயர்ஸ் நிறுவன மேலாண் இயக்குநர் கே.சந்திரபிரகாஷ், நிறுவன இயக்குநர் ஆர்.சந்திரசேகர் மற்றும் சென்னை, கோவை, திருச்சியில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் மீது கூட்டுச் சதி, மோசடி, நம்பிக்கை மோசடி, ஊழல் தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின்கீழ் சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர்.
31 இடங்களில்…
இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட வழக்கு பதிவு செய்யப்பட்ட நபர்கள், அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். சென்னையில் 9, கோவையில் 14, திருச்சி 2, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டில் தலா 3 என மொத்தம் 31 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
கோவை சுகுணாபுரத்தில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் வீட்டுக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று காலை வந்தபோது, அவர் வீட்டில் இருந்தார். அவரிடம் வீட்டில் சோதனை நடத்த வந்துள்ளதாக போலீஸார் தெரிவித்ததைத் தொடர்ந்து அவரும் ஒத்துழைப்பு அளித்தார். தொடர்ந்து அவரது வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர்.
அதேபோல, கொடிசியா அருகேயுள்ள சந்திரபிரகாஷ் வீடு, பீளமேடு அண்ணா நகரில் உள்ள சபரி எலெக்ட்ரிகல்ஸ் நிறுவனம், திருச்சியில் கணேசா டிரேடர்ஸ் எலெக்ட்ரிகல்ஸ், திருவானைக்காவல் கணபதி நகரில் சுதாகரன் என்பவர் நடத்தி வரும் சமிஹாஸ் ஏஜென்சி, திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே படூர்மேடுவில் உள்ள ஏசிஇ டெக் என்ற கனரக வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்தது.
மருத்துவக் கல்லூரி அனுமதி
முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரும் தற்போதைய விராலிமலை எம்எல்ஏவுமான சி.விஜயபாஸ்கர், தனது பதவிக்காலத்தில் திருவள்ளூர் மாவட்டம் மஞ்சக்கரணை கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு தேசிய மருத்துவ குழுமத்தின் விதிமுறைகளுக்கு முரணாக சான்று வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சி.விஜயபாஸ்கர் உட்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். சென்னையில் 5, சேலத்தில் 3, மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருவள்ளூர், தாம்பரம் ஆகிய இடங்களில் தலா ஒரு இடம் என மொத்தம் 13 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, அதன் உரிமையாளர் வீடு, சென்னை அடையாறு எல்.பி சாலையில் விஜயபாஸ்கர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு, கீழ்ப்பாக்கம் ரெம்ஸ் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின்போது, எஸ்.பி வேலுமணி தொடர்புடைய இடங்களில் இருந்து ரூ.32.98 லட்சம் ரொக்கம், 1,228 கிராம் தங்க நகைகள், 948 கிராம் வெள்ளிப் பொருட்கள், 10 நான்கு சக்கர வாகனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், வழக்கு தொடர்புடைய 316 ஆவணங்கள், 2 வங்கி பெட்டக சாவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதேபோல், சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.18.37 லட்சம் ரொக்கம், 1,872 கிராம் தங்க நகைகள், 8.28 கிலோ வெள்ளிப் பொருட்கள், 120 ஆவணங்கள், ஒரு வன்தட்டு, ஒரு பென் டிரைவ், 2 ஐபோன், 4 வங்கி பாதுகாப்பு பெட்டக சாவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து விசாரணை நடப்பதாக லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.
சி.வி.சண்முகம் ஆவேசம்
சென்னை அடையாறில் உள்ள சி.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடந்துகொண்டிருந்தபோது, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அங்கு வந்தார். அப்போது பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸார் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. இதையடுத்து போலீஸாருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அப்பாவு அளித்த புகார்
தமிழக சட்டப்பேரவை தலைவர் எம்.அப்பாவு, கடந்த 2019 மே 20-ம் தேதி, 2020 ஜூலை 15-ம் தேதிகளில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சிலருக்கு எதிராக இரண்டு புகார் மனுக்களை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாருக்கு அனுப்பியிருந்தார். அதில், ‘மின்சார சேமிப்பு, பராமரிப்பு காரணங்களுக்கான கிராம பஞ்சாயத்துகளில் உள்ள பழைய தெருவிளக்குகளுக்கு பதில், எல்இடி விளக்குகளை கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை படிப்படியாக மாற்றம் செய்துள்ளனர். இந்தப் பணிக்கான டெண்டரில் எல்இடி விளக்குகளை விநியோகம் செய்பவர்களாக கலந்துகொண்டவர்கள் போலியானவர்கள் அல்லது மின்னணு பொருட்கள் விற்பனையில் அனுபவம் இல்லாதவர்கள். அவர்கள் வேறுயாருமல்ல, எஸ்.பி.வேலுணியின் பினாமிகள்தான். கடந்த 2015-16, 2016-17, 2017-18-ம் நிதியாண்டுகளில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவரது நிர்வாக அலுவலர்கள், மாநில அளவில் அமைக்கப்பட்ட குழு உறுப்பினர்கள், சந்தை விலையைவிட கொள்முதல் செய்யப்படும் எல்இடி விளக்குகளுக்கு கூடுதல் விலையை நிர்ணயம் செய்தனர். இதன்மூலம் ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் துறைக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இந்த புகார்களின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.