கோவாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் இன்று பா.ஜ.க.வில் இணைந்தனர். இதற்கிடையே பஞ்சாப் மாநிலத்தில் 10 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பா.ஜ.க.திட்டமிடுகிறது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டியுள்ளார்.
சுற்றுலாவுக்கு பெயர் போன கோவாவில் பாரதி ஜனதா கட்சியைச் சேர்ந்த முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மொத்தம் 40 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கோவாவில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணிக்கே அதிக இடங்கள் தேர்தலில் கிடைத்தன. இந்த நிலையில் எதிர்க்கட்சியாக இருந்து வரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 8 சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று காலை கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த்தை நேரில் சந்தித்து பேசினர். இவர்களில் மிக முக்கியமாக முன்னாள் முதல்வர் திகம்பர் காமத், எதிர்க்கட்சி தலைவர் மைக்கேல் லோபா ஆகியோரும் அடங்குவர். அவர்கள் தவிர, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான தெலிலா லோபோ, ராஜேஷ் பல்தேசாய், கேதர் நாயக், சங்கல்ப் அமோன்கர், அலெக்சோ செகீரா மற்றும் ருடால்ப் பெர்னாண்டஸ் ஆகியோரும் கோவா முதல்வரை சந்தித்தனர்.
இதன்பின்னர், காங்கிரஸ் சட்டசபை கூட்டம் நடத்தி ஆலோசனை செய்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய மைக்கேல் லோபோ, நாங்கள் பா.ஜ.க.வில் இணைந்து விட்டோம். பிரதமர் மோடி மற்றும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கரங்களை வலுப்படுத்த போகிறோம் என கூறியுள்ளார். பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசை எதிர்கொள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை யாத்திரையை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டுள்ள தருணத்தில், இந்நடவடிக்கையை காங்கிரசார் எடுத்து உள்ளனர். சமீப நாட்களாக காங்கிரசில் இருந்து வெளியேறும் தலைவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் காஷ்மீரில் காங்கிரசில் இருந்து விலகியதும், அவருக்கு ஆதரவாக முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்களும் அடுத்தடுத்து விலகினர்.
கடந்த 4-ந் தேதி குஜராத் இளைஞர் காங்கிரஸ் தலைவர் வகேலா விலகினார். அதற்கு முன் கட்சியில் இருந்த ராஜீந்தர் பிரசாத் கடந்த 2-ந் தேதி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவியில் இருந்தும் விலகினார். இந்நிலையில், கோவா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்து தலைமைக்கு அதிர்ச்சி அளித்துள்ளனர். தற்போது கோவாவில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தமாக மூன்று எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர். தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட சீட்டு வழங்கப்பட்ட உறுப்பினர்கள் தாங்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் கட்சி மாற மாட்டோம் என சத்தியம் செய்த நிலையில் அது தொடர்பாக இன்றைய தினம் கட்சி மாறிய எம்.எல்.ஏ.க்களிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் திகம்பர் காமத் பதில் அளிக்கையில், தேர்தலுக்கு முன்பாக காங்கிரசை விட்டு வெளியேற மாட்டோம் என்று கடவுளிடம் சத்தியம் செய்தது உண்மைதான். ஆனால் மீண்டும் கடவுளிடம் சென்று பாரதிய ஜனதா கட்சியில் இணைவதைப் பற்றி கூறியபோது கடவுள் அதை ஏற்றுக்கொண்டுள்ளார் எனத் தெரிவித்தார். அதே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் மாநிலத்தில் 10 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க. விலை பேசி வருவதாக புதிய குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
ஏற்கனவே தலைநகர் டெல்லியில் “ஆபரேஷன் தாமரை” மூலம் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க பாரதிய ஜனதா கட்சி முயல்வதாகவும், இதற்காக 800 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது
– விக்னேஷ்முத்துSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM