திரைப்படங்களில் நடிப்பதைத்தாண்டி தன்னுடைய கேரக்டருக்காக உடலை வருத்திக்கொண்டு நடித்த தமிழ் நடிகர்களில் சேர்ந்துள்ளார் சிம்பு.
சிம்பு இவ்வாறு உடலை வருத்தி நடிப்பது முதல் முறை அல்ல ஏற்கெனவே மாநாடு படத்திற்காக கடுமையாக உடலைக்குறைத்தார் சிம்பு.
அந்த கால ஜெமினிகணேசன் தொடங்கி பலரும் உடலை வருத்தி நடித்துள்ளனர்.
வசூல் சக்ரவர்த்தியாக இருந்து என்ன பயன்..பர்ஃபாமன்ஸ் இல்லையேப்பா
சினிமாவில் சாதித்த நடிகர்களில் பெயர் சொல்லும் ரோலை செய்தவர்கள் எப்போதும் பேசப்பட்டார்கள். வசூல் ரீதியாக என்னதான் வெற்றி பெற்றிருந்தாலும் பல ஆண்டுகள் கழித்து அந்த நடிகரின் சாதனை என்று பார்த்தால் அவர் ஏற்ற வேடத்தையும் அதற்காக மெனக்கெட்டதை பற்றி மட்டுமே பேசுவார்கள். இதற்காக இந்த ஒரு பாராட்டுக்காக உடலை வருத்திக்கொண்ட நடிகர்களுக்கு எப்போதுமே ரசிகர்களிடம் பாராட்டு உண்டு. வசூல் சக்ரவர்த்தியாக இருந்து என்ன பயன்..பர்ஃபாமன்ஸ் இல்லையேப்பான்னு வடிவேலு பாணியில் தான் கேட்பார்கள்.

இரண்டு வகையில் உடலை வருத்தி நடிக்கும் நடிகர்கள்
உடலை வருத்திக்கொள்வது என்பதில் இரண்டு ரகம் உண்டு. ஒன்று அந்த வேடத்திற்காக போடப்படும் மேக்கப், அந்த வேடத்திற்காக எடுக்கப்படும் முயற்சி, அதனால் வரும் சிரமத்தை தாங்கி நடிப்பது ஒரு வகை. வேடத்திற்காக உடல் எடையைக் கூட்டுவது அல்லது குறைப்பது என்பது ஒரு வகை. சிலர் படத்துக்காக உடற்பயிற்சி செய்து கட்டுமஸ்தாக மாற்றுவார்கள் இதுவும் இரண்டாவது வகையில் சேரும்.

ஜெமினி கணேசனின் 70 ஆண்டுக்கு முந்தைய சாதனை
அந்த வகையில் வேடத்துக்காக உடலை வருத்தியவர்கள் பட்டியலை எடுத்தால் பெரிதாக நீளும். அதில் முதலிடம் பிடிப்பதில் கமல்ஹாசனை சொன்னாலும் அவரையும் தாண்டி அவர் குழந்தையாக இருக்கும்போதே வேடம் தரித்த நடிகர்கள் பலர் உண்டு. அதில் முக்கியமானவர் ஜெமினி கணேசன். 1955 ஆம் ஆண்டிலேயே கணவனே கண் கண்ட தேய்வம் படத்தில் கூண் விழுந்த அரூபியாக நடித்திருப்பார். படத்தின் பிற்பாதி முழுவதும் அவ்வேடம் வரும். ஜெமினிக்கு பெயர் வாங்கி தந்த படம்.

நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் தொழு நோயாளி வேடம்
அடுத்து இதுபோல் மெனக்கிட்டவர் எம்.ஆர்.ராதா. நடிகவேள் என பாராட்டப்பட்ட எம்.ஆர்.ராதா ரத்தக்கண்ணீர் படத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் வேடத்தில் கூன் விழுந்த முதுகுடன் கைகளை தூக்கியபடி படம் முழுவதும் நடித்திருப்பார். அதற்கு அடுத்து நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் நம்பியார் இரண்டாவது ஜென்மம் எடுத்த ஹீரோயினை பழிவாங்க அலையும் வயதான ஜமீந்தாராக வயதான கெட்டப்பில் முகம் சுருங்கிய கூன் விழுந்ததளர் நடி வேடை அந்த மேக்கப்புக்குள்ளும் முகத்தை கொடூரமாக வைத்து நடித்திருப்பார். இதே போல் உலகம் சுற்றும் வாலிபனில் முகத்தின் அமைப்பை மாற்றி நடித்திருப்பார். வாயே புண்ணாகி போனது என பின் நாளில் பேட்டி அளித்திருந்தார்.

’2020 ஆம் ஆண்டின் கமல்ஹாசன்’ சூர்யா
அடுத்து சிவாஜி கணேசன் அவரது பல படங்களில் அப்பராக வயதான வேடத்தில், பாபு படத்தில் வயதான உடல் நலிவுற்ற முதியவர் வேடம், நவராத்திரி படத்தில் விதவிதமான வேடம் என அசத்தியிருப்பார். கமல் ஹாசன் பற்றி சொல்வதற்கு முன் 2020 கமல்ஹாசன் சூர்யாவுக்கு வருவோம். இதில் இன்றைய இளம் தலைமுறை நடிகரான சூர்யா பேரழகன் படத்தில் படம் முழுவதும் துருத்திக்கொண்டிருக்கும் பல்லுடன் கூன் விழுந்த இளைஞராக நடித்திருப்பார். சில படங்களில் கட்டுடலாக நடிக்க உடற்பயிற்சி செய்து முரட்டுத்தோற்றத்துக்கு மாறியவர் சூர்யா. சமீபத்தில் திருநங்கையாக விஜய் சேதுபதியும், பெண் வேடத்தில் சிவகார்த்திகேயனும் கலக்கி இருப்பார்கள்.

வித்தியாச மேக்கப் உடலை வருத்துவதில் உலக நாயகனுக்கு இணை இல்லை
வேடங்களில் வித்தியாசத்தை காட்ட உடலை வருத்திய இன்னொரு நடிகர் விக்ரம். ஐ படத்தில் இவர் அரூபியாக கூன் விழுந்தவராக நடித்திருப்பார். எண்ணிக்கையில் அடங்காத படங்களில் வித்தியாச கெட்டப்புகளில் அசத்தியவர் கமல்ஹாசன் எனலாம். முழு படத்தில் உயர் குறைபாடு உள்ளவராக அப்பு வேடத்தில், படம் முழுவதும் பெண் வேடத்தில் அவ்வை சண்முகி, 10 வேடங்கள் அதில் தான் எத்தனை வகை மேக்கப்புகள் அதற்காக கமல் பட்டபாடு, அந்த மேக்கப்புக்குள் இருந்து முகபாவங்களை காட்ட வேண்டும் இது மிகவும் முக்கியம்.

கமல்ஹாசனை மிஞ்சி உடல் எடையை, குறைத்து கூட்டிய நடிகர் இல்லை
இது தவிர உடல் எடையை கூட்டி குறைத்த நடிகர்கள் என்றால் சிவாஜி கணேசனை சொல்லலாம். அவர் வேடத்துக்காக கூட்டவில்லை என்றாலும் அவர் நடித்த காலக்கட்டத்தில் திடீர் என உடல் மெலிந்து இருப்பார், திடீரென உடல் எடை கூடுவார் இப்படி பல படங்களை சொல்லலாம். கேரக்டருக்காக உடல் எடையை கூட்டி குறைத்து நடித்தவர் என்றால் அதிலும் முதலில் வருபவர் உலக நாயகன் தான். சத்யா தொடங்கி ஆளவந்தான் வரை பல படங்களை சொல்லலாம். ஆளவந்தானில் உடல் எடையை கூட்டுவதற்கு முன் ஒரு கேரக்டரை முடித்து கொடுத்துவிட்டு அதன் பின் உடல் எடையை கூட்டி இன்னொரு கேரக்டரை நடித்து கொடுத்தார். இது மிகவும் கடினமான ஒன்று.

உடல் எடையைக்குறைத்த அஜித் தற்போது பலரையும் வியப்பில் ஆழ்த்தும் சிம்பு
அடுத்து உடல் எடையை கடுமையாக குறைத்து நடித்தவர் என்றால் நடிகர் அஜித்தை சொல்லலாம். இவர் திருப்பதி படத்துக்காக அநியாயத்துக்கு உடல் எடையை குறைத்துக்கொண்டு நடிக்க வந்தார். அஜித் தானா என பலரும் சந்தேகப்பட்டனர். இதேபோல் உடல் எடையை கடுமையாக குறைத்தவர் சிம்பு. மாநாடு படத்துக்கு முன் உடல் பெருத்து கன்னத்து சதைகள் உப்பி காட்சி அளித்த சிம்பு அந்தப்படத்தில் அடையாளம் காண முடியாத அளவுக்கு மெலிந்து நடித்திருந்தார். அதையெல்லாம் துக்கி சாப்பிடும் வகையில் தற்போது வெந்து தணிந்தது காடு படத்தில் 21 வயது இளைஞர் போன்ற தோற்றத்துடன் உடலை மெலிய வைத்து நடித்துள்ளார். அவரது முயற்சியைப்பார்த்து எழுத்தாளர் ஜெயமோகன் வியந்து பாராட்டியுள்ளார்.