உரிமம் இன்றி செயல்பட்ட கல்குவாரிக்கு எதிராகப் போராடிய கரூரைச் சேர்ந்த சமூக ஆர்வலரை குவாரி அதிபர் வாகனம் ஏற்றி கொன்றது, தமிழகம் முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ‘எங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றும் வரையில், அவரின் உடலை வாங்கமாட்டோம்’ என்று சமூக ஆர்வலரின் உறவினர்களும், கல்குவாரிக்கு எதிராக போராடும் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் மூன்றாவது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள குப்பம் பகுதியில் செல்வக்குமார் என்பருக்குச் சொந்தமான, அன்னை ப்ளூ மெட்டல்ஸ் என்ற பெயரில் கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த கல்குவாரிக்கு அருகே காளிப்பாளையத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ஜெகநாதன், அந்த கல்குவாரியால் தனது விவசாயமும், மற்ற விவசாயிகளுடைய விவசாயம் அழிகிறது என்று போராடி வந்தார். இந்நிலையில், அந்த கல்குவாரி கடந்த 2015 – ம் வருடத்தில் இருந்து உரிமம் இல்லாமல் இயங்கி வருவதை அறிந்த ஜெகநாதன் அதுகுறித்து, கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு தொடர்ச்சியாக புகார் அனுப்பி வந்ததாகச் சொல்லப்படுகிறது.
இதனால், கோபமான குவாரி அதிபர், கடந்த 2019 – ம் வருடம் ஜெகநாதன் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தியதாகவும், அந்த வழக்கு தற்போதுவரை நிலுவையில் உள்ளதாகவும் தெரிகிறது. இந்த சூழலில்தான், ஜெகநாதன் இந்த குவாரி பற்றி அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியிருக்கிறார். இதன்காரணமாக, கடந்த 6 நாள்களுக்கு முன்பு, அன்னை ப்ளூ மெட்டல்ஸ் குவாரியில் ஆய்வு செய்த அதிகாரிகள், ஜெகநாதனின் புகாரில் உண்மை இருப்பதை உணர்ந்து, அந்த குவாரிக்கு சீல் வைத்தனர்.
இதனால் கோபமான செல்வக்குமார், கடந்த சனிக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் காருடையாம்பாளையம் அருகில் சென்றுகொண்டிருந்த ஜெகநாதன் மீது, பொலேரோ பிக்கப் வாகனத்தை மோத வைத்து, ஜெகநாதனை படுகொலை செய்ய வைத்தார். விபத்தாக க.பரமத்தி போலீஸார் நினைக்க, ஜெகநாதனின் மனைவியும், சமூக ஆர்வலர்களும், ‘இது திட்டமிட்ட கொலை’ என்று போராடியதால், கொலை வழக்காக இதை பதிவு செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய செல்வக்குமார், டிரைவர் சக்திவேல், ரஞ்சித் ஆகிய மூன்று பேர்களை கைது செய்தனர்.
இந்த நிலையில், ஜெகநாதனின் உடலை கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்தபின், அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்க நினைத்தனர். ஆனால், அவரது உறவினர்களோ, ‘கொலைசெய்யப்பட்ட ஜெகநாதனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை; ரூ. 1 கோடி நிவாரணம் அறிவிக்கணும். அதுவரை உடலை வாங்கமாட்டோம்’ என்று கூறி, போராட்டம் செய்தனர். தொடர்ந்து, ஜெகநாதன் உறவினர்களோடு, சமூக ஆர்வலர்களும் சேர்ந்துகொள்ள, கடந்த மூன்று நாள்களுக்கு மேலாக, மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள உடற்கூறு ஆய்வு மையத்தின் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மூன்று நாள்களுக்கு மேல் நடைபெற்று வரும் காத்திருப்பு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கரூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கீதாஞ்சலி தலைமையிலான அதிகாரிகள் நேற்று காலை (13 – ம் தேதி) 10 மணி அளவில் பேச்சுவார்த்தை நடத்தினர் இருப்பினும், ‘பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு வேலை மற்றும் நிவாரணத் தொகை தமிழக அரசு அறிவிக்கும் வரை உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம்’ என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரியில் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், பாதிக்கப்பட்ட ஜெகநாதன் குடும்பத்தினர் ஆகியோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மதியம் 12 மணியளவில் அளவில் தொடங்கிய பேச்சுவார்த்தை மூன்று மணி மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்றது. ஆனால், அவரின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மேற்பார்வையில் போலீஸார் குவிக்கப்பட்டனர். இதனிடையே, மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடையவே, சமூக ஆர்வலர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட ஜெகநாதன் குடும்பத்தார் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இதுகுறித்து, போராட்டத்தில் ஈடுப்பட்டுவரும் சமூக ஆர்வலர்கள்,
“மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒரு லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகையும், உயிரிழந்த ஜெகநாதன் மனைவிக்கு அரசு சார்பில் விதவை உதவித்தொகையும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார். ஆனால், கரூர் மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சட்டவிரோத கல்குவாரி மரணங்கள் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. க.பரமத்தி அருகே உள்ள கல்குவாரிகளில் சமீபத்தில் நடைபெற்ற விபத்து மரணங்களுக்கு கூட விசாரணை நடத்தப்படவில்லை. தற்போது, ஜெகநாதன் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் சமூக ஆர்வலர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் மரணம் இதுவே கடைசி மரணமாக இருக்க வேண்டும். இயற்கையை காக்க போராடும் சமூக ஆர்வலர்களுக்கு உறுதுணையாக அரசு இருப்பதை காட்டும் வகையில், கந்துவட்டி, தீண்டாமை வன்கொடுமை போன்றவற்றிற்கு உள்ளதைப் போல சமூக ஆர்வலர்களை பாதுகாக்க தனிச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
உயிரிழந்த ஜெகநாதன் குடும்பத்திற்கு அரசு வேலை மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணத் தொகை வழங்கவேண்டும். தமிழக அரசு தமிழகத்தில் நிலவி வரும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலைக்கு தமிழக அரசு முடிவு கட்டும் வகையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மதுரையில் சகாயம் ஐ.ஏ.எஸ் பொறுப்பில் இருந்தபோது, சமூக ஆர்வலர்களுக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி வழங்கினார்.
அதுபோல, தமிழகம் முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணம் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழக முதல்வர் ஜெகநாதன் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கும்பரை தமிழக முதல்வரின் அறிவிப்புக்காக உயிரிழந்த ஜெகநாதன் மற்றும் அவரது குடும்பத்தாருடன் கரூர் மருத்துவ கல்லூரியில் காத்திருப்பு போராட்டத்தை தொடர இருக்கிறோம்” என்றார்கள்.