திருவனந்தபுரம்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ‘இந்தியாவை இணைப்போம்’ (பாரத் ஜோடோ) என்ற பெயரில் கடந்த 7-ம் தேதி கன்னியாகுமரியில் நடைபயணத்தை தொடங்கினார். இதில் ராகுல் காந்தியுடன் கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்கின்றனர்.
12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக காஷ்மீரில் இந்த பயணம் நிறைவடைய உள்ளது. சுமார் 3,500 கி.மீ. தூரம் கொண்ட இந்த பயணம் 150 நாட்களுக்கு நடைபெறும்.
தமிழகத்தில் 4 நாட்கள் யாத்திரையை முடித்துக் கொண்ட ராகுல், கடந்த 11-ம் தேதி கேரளாவில் தொடங்கினார். அங்கு 7 மாவட்டங்களில் 19 நாட்களுக்கு யாத்திரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. 3-ம் நாளான நேற்று காலை 7.15 மணிக்கு கனியாபுரத்தில் ராகுல் காந்தி நடை பயணத்தை தொடங்கினார். அப்போது இடைவிடாமல் மழை பெய்தபோதும் ராகுல் காந்தி, கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் நனைந்தபடியே நடை பயணத்தில் பங்கேற்றனர்.
இதனிடையே, ராகுல் காந்தி தனது முகநூல் பக்கத்தில் பயணம் தொடர்பான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதனுடன், “காலில் கொப்புளங்கள் ஏற்பட்டாலும் நாட்டை ஒருங்கிணைப்பதற்காக தொடங்கப்பட்டுள்ள நடைபயணத்தை நிறுத்த மாட்டோம். #பாரத்ஜோடோயாத்ரா” என பதிவிட்டுள்ளார்.