மதுரை: முதல்வர் சிற்றுண்டி திட்டத்தை நாளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பதையொட்டி, நிகழ்ச்சி நடைபெறவுள்ள மதுரை மாநகராட்சிப் பள்ளியில் முன்னேற்பாடுகள் தீவிராக நடந்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, சில மாநகராட்சிகள், நகராட்சிகள், தொலைதூர கிராமங்களில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதல்கட்டமாக அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான வழிகாட்டுதல்களுடன் அரசாணைகள் வெளியிடப்பட்டன.
இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (வியாழக்கிழமை) தொடங்கி வைக்கிறார். அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு, மதுரை நெல்பேட்டையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் நாளை மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதைத் தொடர்ந்து, காலை 8 மணிக்கு மதுரை வைகை தென்கரையில் உள்ள மதுரை மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு, மதுரை மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வரவேற்பு நிகழ்வில் பங்குபெறும் மாணவ, மாணவிகளின் ஒத்திகை நிகழ்ச்சிகளும் நடந்தன.