அகமதாபாத்: குஜராத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் லிஃப்ட் அறுந்து
விழுந்து 6 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து குறித்து அக்கட்டிடத்தின் உரிமையாளர்கள் போலீஸாருக்கும்,
தீயணைப்புப் படையினருக்கும் உடனடியாக தகவல் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
அப்படி கொடுத்திருந்தால், அந்த தொழிலாளர்களை காப்பாற்றி இருக்க முடியும்
என தீயணைப்புப் படையினர் தெரிவித்தனர். தகவல் தெரியாததால் 3 மணிநேரம்
தாமதமாகவே தீயணைப்புப் படையினர் அங்கு வந்துள்ளனர்.
அடுக்குமாடி கட்டிடம்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பெரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு
வருகிறது. சுமார் 13 மாடிகளை கொண்ட அந்தக் குடியிருப்பு கிட்டத்தட்ட கட்டி
முடிக்கப்படும் தருவாயில் உள்ளது. சுமார் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்
இங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் வசதிக்காக
கட்டிடத்தின் வெளியே தற்காலிக லிஃப்ட் அமைக்கப்பட்டிருந்தது. கட்டுமானப்
பொருட்களை கீழே மேலே கொண்டு செல்வதற்கு இந்த லிஃப்ட்டை தொழிலாளர்கள் பயன்படுத்தி வந்தனர்.
கீழே விழுந்த லிஃப்ட்
இதனிடையே, இன்று பகல் 10 மணியளவில் கட்டிடத்தின் மேல் தளத்திற்கு சிமெண்ட்
மூட்டைகளை எடுத்துக் கொண்டு 8 தொழிலாளர்கள் சென்றனர். இதில்
கட்டிடடத்தின் 7-வது மாடி அருகே சென்ற போது லிஃப்ட் திடீரென வேலை செய்யாமல்
அப்படியே நின்றது. இதனால் அச்சமடைந்த தொழிலாளர்கள் அங்கிருந்து அபயக்
குரல் எழுப்பினர். ஆனால் அவர்களின் குரல் யாருக்கும் கேட்கவில்லை.
இந்நிலையில், சில நொடிகளிலேயே லிஃப்ட் அங்கிருந்து வேகமாக கீழே விழுந்தது.
துடிதுடித்து உயிரிழந்த தொழிலாளர்கள்
இதில் 7 தொழிலாளர்களும் பலத்த காயமடைந்தனர். ஆனால், இந்த விபத்து குறித்து
கட்டிடத்தை கட்டும் கட்டுமான நிறுவனத்தினர் போலீஸாருக்கோ, தீயணைப்புப்
படையினருக்கோ உடனே தகவல் தெரிவிக்கவில்லை. விபத்து குறித்து வெளியே
தெரியவந்தால் ஏதாவது பிரச்சினை ஆகிவிடுமோ என அவர்கள் பயந்து வெளியே கூறாமல்
இருந்தனர். இதில் காயமடைந்த தொழிலாளர்கள் காப்பாற்ற யாரும் இல்லாமல்
ஒருவர் பின் ஒருவராக துடிதுடித்து உயிரிழந்துள்னர்.
தகவல் கொடுத்த பத்திரிகையாளர்கள்
இந்த சூழலில், இந்த விபத்து குறித்து அங்கிருந்த பத்திரிகையாளர்கள்
சிலருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது. அவர்கள் கூறியதன் பேரிலேயே,
போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் அங்கு சென்றுள்ளனர். மதியம் 1
மணிக்குதான் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். இதனால் 7
தொழிலாளர்களின் சடலங்களை மட்டுமே அவர்களால் மீட்க முடிந்தது.
படுகாயத்துடன் மயக்கமுற்ற நிலையில் இருந்த ஒரு தொழிலாளரை மீட்ட
தீயணைப்புப் படையினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கட்டுமான நிறுவனத்தினர் தலைமறைவு
இதுகுறித்து அகமதாபாத் தீயணைப்புப் படை தலைமை அதிகாரி ஜெயேஷ் காடியா
கூறுகையில், “பத்திரிகையாளர்கள் கூறியே இந்த விபத்து சம்பவம் குறித்து
எங்களுக்கு தெரியவந்தது. கட்டுமான நிறுவனத்தினரிடம் இருந்து எங்களுக்கு
எந்த தகவலும் வரவில்லை.விபத்து நிகழ்ந்ததும் அவர்கள் எங்களுக்கு
தெரிவித்திருந்தால் 7 தொழிலாளர்களையும் காப்பாற்றி இருக்கலாம். 3 மணிநேரம்
தாமதமானதால் தான் தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கின்றனர். கட்டுமான
நிறுவத்தினர் தலைமறைவாகி உள்ளனர்” என்றார்.
இதனிடையே, தலைமறைவாக உள்ள கட்டுமான நிறுவனத்தினரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.