புதுடில்லி, கொரோனா தொற்று ஏற்பட்டு அதிக பாதிப்புள்ள நபர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுக்கு யோகா மற்றும் ஆயுர்வேத முறையில் அளிக்கப்பட்ட சிகிச்சை சிறப்பான பலன் அளித்ததாக புதுடில்லி ஐ.ஐ.டி., நிறுவனம் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.கொரோனா தொற்று ஏற்பட்டு மிக தீவிர பாதிப்புக்கு ஆளான 30 பேருக்கு யோகா மற்றும் ஆயுர்வேத முறையில் சிகிச்சை அளிக்க புதுடில்லி ஐ.ஐ.டி., மற்றும் உத்தர பிரதேசத்தின் ஹரித்துவாரை சேர்ந்த தேவ் சன்ஸ்கிருதி விஸ்வவித்யாலயா ஆகியவை ஏற்பாடு செய்தன.
இந்த சிகிச்சையினால் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகளை ஐ.ஐ.டி., வெளியிட்டுள்ளது. அதன் விபரம்:கொரோனா தொற்று ஏற்பட்டு அதிக பாதிப்புள்ள நபர்களாக அடையாளம் காணப்பட்ட 30 பேரை இந்த ஆய்வுக்கு உட்படுத்தினோம். அவர்கள் நீரிழிவு, ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு, இதயக்கோளாறு போன்ற ஏதோவொரு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக முறையான ஆயுர்வேத மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டன. ‘ஆன்லைன்’ வாயிலாகவே, யோகா, மூச்சு பயிற்சி, தியானம் உள்ளிட்டவை பயிற்றுவிக்கப்பட்டன. சில தேவையான விட்டமின்களுக்கு மட்டும் அலோபதி மருந்துகள் அளிக்கப்பட்டன.
காய்ச்சலுக்கு ‘பாரசிட்டமால்’ அளிக்கப்பட்டது. இந்த தொடர் சிகிச்சையால் அறிகுறிகளுடன் கூடிய தொற்றால் பாதிக்கப்பட்ட 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ஐந்து நாட்களிலேயே உடல்நிலை தேற துவங்கினர். மேலும் 60 சதவீதம் பேர் 10 நாட்களுக்குள் குணமடைந்தனர். ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்த ஆறு பேர், மகராசனா மற்றும் ஷித்திலாசனா வாயிலாக குணம் பெற்றனர். இவர்கள் தீவிர சிகிச்சை பிரிவு வரை செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement