கோவாவில் பாஜக-வுக்கு தாவிய 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள்… அதிர்ச்சியில் அரசியல் வட்டாரங்கள்..!!

பனாஜி: ஒருபுறம் ராகுல்காந்தி இந்தியாவை ஒருங்கிணைப்போம் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டிருக்க, கோவாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவா முன்னாள் முதல்வர் திகம்பர் காமத், மைக்கேல் லோபோ உள்ளிட்ட 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்  முதல்வர் பிரமோத் சாவந்த் மற்றும் சபாநாயகர் விதான் சபாவையும் சந்தித்தனர். சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறாத நிலையில், எம்எல்ஏக்கள் சபாநாயகரை சந்திப்பது வழக்கத்திற்கு மாறானது என்பதால் அவர்கள் பாரதிய ஜனதா கட்சியில்  இணையப்போவதாக தகவல் வெளியானது.

இந்த சந்திப்பிற்கு பின் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்திருப்பதாக பாஜக மாநில தலைவர் சதானந்த் ஷெட் தனவாடே தெரிவித்தார். ஒருகட்சியின் மொத்த எம்எல்ஏக்களில் மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏக்கள் வேறு கட்சிக்கு மாறும் போது அவர்கள் மீது கட்சித் தாவல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. ராகுல்காந்தியின் பாரத் ஜோடா யாத்திரையால் கதிகலங்கியிருக்கும் பாஜக எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பணம், மத்திய அமைப்புகள் என எல்லா யுக்திகளையும் பயன்படுத்தி வருவதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா தெரிவித்தார்.

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு மைக்கேல் லோபோ எம்.எல்.ஏ., பாரத் ஜோடா யாத்திரை காங்கிரஸ் கட்சியை மேம்படுத்துவதற்கு எந்தவிதத்திலும் பலனளிக்காது. கட்சியிலேயே பல பிரிவினைகள் உள்ளன. அதை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. முதலில் அதை சரி செய்ய வேண்டும். பாரத் ஜோடா யாத்திரை தோல்வியில் முடியும். கோவாவில் காங்கிரஸ் கட்சி வலுவடையக் காரணமாக இருந்த முன்னணி தலைவர்கள் கூடிய விரைவில் கட்சியில் இருந்து வெளியேறுவர் என கூறியிருந்தார். கோவா சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தங்கள் வெற்றி பெற்றால் ஒருபோதும் கட்சி மாறமாட்டோம் என கோவில், சர்ச் மற்றும் மசூதிகளில் தேர்தல் பொறுப்பாளர் ப.சிதம்பரம் முன்னிலையில் சத்தியம் செய்தனர்.

தற்போது அந்த சத்தியத்தை மீறி செயல்பட்டிருப்பதாக காங்கிரஸ் தொண்டர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து கேட்டதற்கு மீண்டும் கோயிலுக்கு சென்று கடவுளிடம் என்ன செய்வதென்று கேட்டதாகவும், அதற்கு உங்களுக்கு எது நல்லதோ அதை செய்யுங்கள் என கடவுள் சொல்லிவிட்டதாகவும் முன்னாள் முதல்வரான திகம்பர் காமத் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சிக்கு தற்போது 3 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.