ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக பாடுபட்டு உயிர் நீத்த தியாகி இமானுவேல் சேகரின் 65-வது நினைவு தினம் கடந்த 11-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. அதனையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரின் நினைவிடத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என ஏராளமான அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில துணைத்தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன், மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி, முன்னாள் எம்.பியும், மாநில துணைத் தலைவருமான சசிகலா புஷ்பா உள்ளிட்ட பலரும் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சசிகலா புஷ்பாவிடம், பொன்.பாலகணபதி தவறான முறையில் நடந்துக்கொளவது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது. எடிட் செய்து ரிப்பீட் மோடியில் இருந்த அந்த வீடியோவை பகிர்ந்த பலரும் பாஜகவை சரமாரியாக விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில், மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சசிகலா புஷ்பாவின் பின்னால் நின்றிருந்த பாலகணபதி மலர்வளையம் வைக்க முன்னால் வருவதும், கூட்ட நெரிசலில் சசிகலா புஷ்பா அவர்களின் சேலை முந்தானை இரு நபர்களுக்கு இடையில் சிக்கிக்கொண்டதால் அதனை விடுவித்து பாலகணபதி உதவி செய்வது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது.
அதோடு “திமுகவின் பார்வை எப்போதும் குஜால்கள்தான். அவர்களால் எதையும் சரியாக பார்க்க முடியாது. மூளை அத்தகையது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார் காயத்ரி ரகுராம்.