சிங்கப்பூர்,
சிங்கப்பூரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள புக்கிட் மேரா நகரில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 61 வயது முதியவர் ஜெஸ்விந்தர் சிங் தில்பரா சிங்.
கடந்த மாதம் 26-ந்தேதி தனது வீட்டுக்கு அருகில் உள்ள கடை வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த ஜெஸ்விந்தர் சிங், அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு வெளியே இருந்த குளிர்சாதன பெட்டியின் கதவை உடைத்து, 3 சிங்கப்பூர் டாலர் (சுமார் ரூ.170) மதிப்புடைய 3 குளிர்பான பாட்டில்களை திருடி சென்றார்.
இது தொடர்பாக சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஜெஸ்விந்தர் சிங்கை அடையாளம் கண்டனர்.
பின்னர் அவரின் வீட்டுக்கு சென்று சோதனை நடத்திய போலீசார் அங்கிருந்த குளிர்சாதன பெட்டியில் இருந்து 2 குளிர்பான பாட்டில்களை மீட்டனர். திருடிய மற்றொரு குளிர்பானத்தை தான் குடித்துவிட்டதாக ஜெஸ்விந்தர் சிங் போலீசிடம் கூறினார்.
அதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து, அவர் மீது திருட்டு வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த சிங்கப்பூர் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது.
குளிர்பான பாட்டில்களை திருடிய குற்றத்துக்காக ஜெஸ்விந்தர் சிங்குக்கு 6 வாரங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.