சென்னை: சொத்து வரி உயர்வைத் தொடர்ந்து சென்னையில் குடிநீர் வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சொத்து வரியை உயர்த்தி சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் புதிய சொத்து வரி உயர்வை அமல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றன. சென்னையில் புதிய சொத்து வரியை வசூலிக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. இதன்படி புதிய சொத்து வரி தொடர்பான நோட்டீஸ் தபால் மூலம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
புதிய சொத்து வரி நோட்டீஸில் நீங்கள் புதிதாக கட்ட வேண்டிய சொத்து வரி எவ்வளவு என்ற விவரம் இருக்கும். தெருவின் மதிப்பு, கட்டட பரப்பளவு, காலிமனை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, சொத்து வரி குறித்து தெளிவாக தெரிவிக்கப்படும். உங்களின் பகுதியில் அடிப்படை தெருக் கட்டணம் எவ்வளவு என்பதை அடிப்படையாக இந்தப் புதிய சொத்து வரி நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும்.
இந்நிலையில், சென்னையில் குடிநீர் வரியும் உயர்ந்துள்ளது. சென்னை மாநகராட்சி நிர்ணயம் செய்து சொத்து வரியில் 7 சதவீத தொகையை குடிநீர் வரியாக செலுத்த வேண்டும். ஆதாவது உங்களின் சொத்து வரி ரூ.100 என்றால் ரூ.7 குடிநீர் வரியாக செலுத்த வேண்டும். இது தொடர்பான தகவல் குடிநீர் இணைப்பு பெற்றுவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. புதிய குடிநீர் வரியை செலுத்த வரும் 30-ம் தேதி கடைசி நாள் ஆகும்.