புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் சப்-இன்ஸ்பெக்டர் (எஸ்.ஐ) பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை ஜம்மு காஷ்மீர் அரசு பணியாளர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் நடத்தியது. இதன் முடிவுகள் கடந்த ஜூன் 4-ம் தேதி வெளியானது. இதில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்ததையடுத்து, இதுகுறித்து விசாரிக்க காஷ்மீர் நிர்வாகம் விசாரணைக் குழுவை அமைத்தது. எழுத்து தேர்வில் முறைகேடு செய்ததாக 33 பேர் மீது விசாரணைக்குழு குற்றம் சுமத்தியது.
இதையடுத்து இதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என காஷ்மீர் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்தது. இதனால் இந்த முறைகேடு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்ததாக சிபிஐ கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி அறிவித்தது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் அரசு ஊழியர் தேர்வு வாரிய தலைவர் காலித் ஜெஹாங்கீர், தேர்வு கட்டுப்பாட்டாளர் அசோக்குமார் ஆகியோரது அலுவலகங்கள், வீடுகள் உட்பட 33 இடங்களில் சிபிஐ நேற்று இரண்டாவது முறையாக சோதனை நடத்தியது.
இது குறித்து சிபிஐ கூறியதாவது: ஜம்மு காஷ்மீர் அரசு ஊழியர் தேர்வு வாரிய அதிகாரிகள், வினாத்தாள் தயாரித்த பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம், ஆதாயம் அடைந்த விண்ணப்பதாரர்கள் மற்றும் சிலர் சேர்ந்து எழுத்துத் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு, ரஜவுரி, சம்மா மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் வழக்கத்துக்கு மாறாக அதிக அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வினாத்தாள் தயாரிப்பில் பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தை ஈடுபடுத்தி ஜம்மு காஷ்மீர் அரசு ஊழியர் தேர்வு வாரியம் விதிமுறைகளை மீறியுள்ளது. இவ்வாறு சிபிஐ தெரிவித்துள்ளது.