சென்னை: தமிழகம் முழுவதும் குழந்தைகளுக்கு ப்ளூ காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. எழும்பூர் மருத்துவமனையில் ஒரே நாளில் 100 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் , 50 மருத்துவ கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனைகள், 1 அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை, 1 அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 29 மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், 273 வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகள், 1,806 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8,713 துணை சுகாதார நிலையங்கள், 460 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 15 நகர்ப்புற சமுதாய மையங்கள் உள்ளன.
இவற்றில் தற்போது பெரும்பாலான இடங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக வரக்கூடிய பொது மக்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளது. மழை , வெயில் என மாறுபட்ட பருவநிலை காரணமாக குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு வைரஸ் காய்ச்சலுடன் சளி, இருமல் பாதிப்பும் கண்டறியப்பட்டு வருகிறது.
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் காய்ச்சல் வார்டில் ஏராளமான குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரு நாள் மட்டும 100க்கு மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மொத்தம் 300 படுக்கைகள் காய்ச்சல் வார்டில் உள்ளன. இந்த படுக்கைகள் முழுவதும் நிரம்பியதால் கூடுதல் படுக்கைகள் அமைக்கப்பட்டு குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இது போன்று கோவை, மதுரை, திருச்சி, நெல்லை உட்பட பல்வேறு இடங்களிலும் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்படக்கூடிய குழந்தை எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது.
அறிகுறிகள் என்ன?
- ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் குழந்தைகளைத் தான் அதிகம் பாதிக்கும்.
- ஜலதோஷம், மிக அதிக காய்ச்சல், விடாமல் ஏற்படும் இருமல் ஆகியவை இதன் அறிகுறியாகும்.
- இந்த காய்ச்சல் சுவாச மண்டலத்தை அதிகம் பாதிக்கும்.
- உடல் வலி, தலைவலி, சோர்வு, தொண்டை வறட்சி, வாந்தி , வயிற்று வலி போன்றவைகளும் இருக்கும்.
சிகிச்சை
- ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் முதல் 4 நாட்களில் குணமாகிவிடும்
- சிலருக்கு மட்டும் இருமலுடன் ஒரு வாரம் வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது.
- இதற்கு ஏற்கனவே தடுப்பூசி உள்ளது.