கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசு ஊழலில் திளைக்கிறது என்று கூறி நபானா அபிஜான் பேரணிக்கு (தலைமைச் செயலகம் நோக்கி பேரணி) பாஜக அழைப்பு விடுத்தது.
இதைத் தொடர்ந்து நேற்று மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக மூத்த தலைவருமான சுவேந்து அதிகாரி தலைமையில் பாஜக தலைவர்கள் ஹவுரா பகுதி அருகிலிருந்து பேரணியாக புறப்பட்டனர்.
அவர்கள் தலைமைச் செயலகம் அருகே வந்தபோது போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
தலைமைச் செயலகம் நோக்கி முன்னேற முயன்ற அவர்களை போலீஸார் தடுத்தி நிறுத்தி போலீஸ் வேன்களில் ஏழைத்து சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி, மாநில துணைத் தலைவர் திலீப் கோஷ் உள்ளிட்ட ஏராளமான பாஜக நிர்வாகிகள் போலீஸ் வேன்களில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
பல்வேறு இடங்களில் இருந்து பாஜக நிர்வாகிகள் பேரணியாக வந்ததால், நகரின் முக்கிய சாலைகளில் போலீஸார் தடுப்புகளை வைத்து அவர்களைத் தடுத்தனர். மீறி பேரணியாக செல்ல முயன்றவர்களை வேனில் ஏற்றி சிறைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.