ராணிப்பேட்டை : திருட்டு வழக்கில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி ராணிப்பேட்டை எஸ்பி அலுவலகத்தில் இரு மகள்களுடன் தாய் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தாலுகா ஐப்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர்(40), கூலிதொழிலாளி. இவரது மனைவி ஜெயந்தி(35). தம்பதியருக்கு ஹேமலதா, கிருத்திகா என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், ராஜசேகரன் தான் புதிதாக கட்டிய வீட்டில் கடந்த 9ம் தேதி கிரஹப்பிரவேசம் நடத்தினார். அப்போது, வீட்டில் இருந்த ₹1 லட்சம் ரொக்கம், 10 சவரன் நகைகள் திருட்டுபோனதாக கூறப்படுகிறது. மேலும், இதுதொடர்பாக 4 பேரை சந்தேகத்தின்பேரில் போலீசாரிடம் ஒப்படைத்தார்களாம்.
ஆனால், போலீசார் அவர்களிடம் விசாரிக்காமல் அனுப்பிவிட்டதாக தெரிகிறது. இதனிடையே, உடல்நிலை பாதித்த ஜெயந்தியின் கணவர் ராஜசேகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், நகை திருட்டு வழக்கில் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதால் மனவேதனை அடைந்த ஜெயந்தி தனது இரு மகள்களுடன் நேற்று காலை ராணிப்பேட்டை எஸ்பி அலுவலகத்திற்கு வந்தார். அப்போது பையில் பிளாஸ்டிக் கேனில் வைத்திருந்த மண்ணெண்ணெயை தன் மீதும், மகள்கள் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அப்போது எஸ்பி அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் நின்றிருந்த பெண் காவலர் கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் வேகமாக சென்று ஜெயந்தியின் கையில் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்தனர். மேலும், மூவர் மீதும் தண்ணீர் ஊற்றி அமர வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் வழக்கு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயந்தியிடம் கூறி சமாதானம் செய்தனர். திருட்டு வழக்கில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி இரு மகள்களுடன் தாய் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.