டெல்லி: நமது கலாச்சாரம், வரலாற்றின் ஆன்மாவை புரிந்துகொள்ள நமது அலுவல் மொழியான இந்தியை நாம் கற்க வேண்டும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்தி திவாஸ் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக தேவநாகரி எழுத்துக்களில் இந்தி ஏற்றுக் கொள்ளப்பட்டதை நினைவுகூரும் வகையில், இந்தி மொழி பேசும் மக்களால், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14ம் தேதி இந்தி திவாஸ் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மொழி தாய் மொழியாக உள்ளது. அவற்றுள் ஒன்று இந்தி.
இந்நிலையில், இந்தி தின நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உள்ளூர் மொழிகளும், இந்தி மொழியும் நமது கலாச்சார ஓட்டத்தில் முதன்மையானவை. ஒவ்வொரு மொழியையும் நாம் பலப்படுத்துவதன் மூலம் அலுவல் மொழியான இந்தியையும் நாம் பலப்படுத்த முடியும். நாட்டின் ஆட்சி நிர்வாகம், ஆராய்ச்சி ஆகியவை நம் உள்ளூர் மொழி மற்றும் அலுவல் மொழிகளில் நடக்க உறுதியேற்க வேண்டும். நமது கலாச்சாரம், வரலாற்றின் ஆன்மாவை புரிந்துகொள்ள நமது அலுவல் மொழியான இந்தியை நாம் கற்க வேண்டும் என்றார்.
முன்னதாக இந்தி தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து, இந்தியில் அமித்ஷா வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், இந்தியாவின் அலுவல் மொழியான இந்தி நாட்டை ஒன்றிணைக்கும் என தெரிவித்திருந்தார். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளின் நண்பன் இந்தி மொழி எனவும், இந்தி உட்பட இந்தியாவின் அனைத்து மொழிகளையும் மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோடி அரசு உறுதி பூண்டுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்தி மொழியை பாதுகாத்து மேம்படுத்துவதற்கு பங்களித்த மாபெரும் ஆளுமைகளுக்கு எனது வணக்கம் என்றும் தெரிவித்திருந்தார்.