சென்னை: சிம்பு, கெளதம் மேனன், ஏஆர் ரஹ்மான் கூட்டணியில் உருவாகியுள்ள ‘வெந்து தணிந்தது காடு’ நாளை வெளியாகிறது.
ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘வெந்து தணிந்தது காடு’ கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என சொல்லப்படுகிறது.
வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீஸை முன்னிட்டு ட்விட்டர் ஸ்பேசில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார் சிம்பு.
வெறித்தனமான வெயிட்டிங்கில் ரசிகர்கள்
மாநாடு படம் மூலம் கம்பேக் கொடுத்துள்ள சிம்பு, அடுத்து வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் மாஸ் என்ட்ரி கொடுக்கவுள்ளார். சிம்பு, கெளதம் மேனன், ஏஆர் ரஹ்மான் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளதால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறிப்போயுள்ளது. இதனிடையே திடீரென வெந்து தணிந்தது காடு படத்தை வெளியிட தடை செய்ய வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. ஆனால், தற்போது அந்த வழக்கில் இரு தரப்பினரும் சமரசமாக சென்றதால், நாளை கண்டிப்பாக படம் வெளியாகவுள்ளது.
டிவிட்டர் ஸ்பேஸில் கலந்துரையாடிய சிம்பு
‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் ரிலீஸை முன்னிட்டு, டிவிட்டர் ஸ்பேஸில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார் சிம்பு. அப்போது பல சுவாரஸ்யமான விசயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார். அதில், நடிகை ராதிகாவுடன் இணைந்து நடித்ததில் ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்ததாகக் கூறினார். ராதிகாவின் நடிப்பை பல படங்களில் பார்த்து வியந்துள்ளேன், இப்போது சேர்ந்து நடிக்கும் போது நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது என்றும் கூறினார்.
ஏஆர் ரஹ்மானை புகழ்ந்த சிம்பு
ஏஆர் ரஹ்மான் எப்போது சிம்புவின் படங்களுக்கு தனித்துவமான இசையைக் கொடுப்பது எப்படி என, ரசிகர்கள் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த சிம்பு, “ரஹ்மான் சாருடன் எப்போதுமே எனக்கு கனெக்டிவிட்டி உண்டு. அவர் எனது அப்பாவின் படங்களுக்கு இசையமைக்க வரும் போது, ரஹ்மானின் கீ போர்டில் எதாவது சேட்டை செய்துவிட்டு வந்துவிடுவேன். அவரது இசைதான் இந்தப் படத்தின் பலமாக இருக்கும். அவரால் தான் இந்தக் கதைக்கு தேவையான இசையைக் கொடுத்து ரசிகர்களை திருப்திபடுத்த முடியும்” எனக் கூறினார்.
கூல் சுரேஷுக்கு மனசார நன்றி
தொடர்ந்து ரசிகர்களுடன் பேசிய சிம்பு, “நாளை காலை முதல் காட்சி பார்க்க நான் விரும்பவில்லை. படத்தை நீங்களே பார்த்துவிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க” என்றார். மேலும், “வெந்து தணிந்தது காடு படத்திற்கு ஆரம்பத்தில் இருந்து ப்ரோமோஷன் செய்த கூல் சுரேஷுக்கு மனசார நான் நன்றி சொல்லித்தான் ஆகணும். போற இடமெல்லாம் வெந்து தணிந்தது காடு, சிம்புவுக்கு வணக்கத்த போடு என பயங்கரமாக ப்ரோமோஷன் செய்தவர் அவர் தான்” எனக் கூறினார்.