
நைட்டு தூங்கிட்டு, 5 மணி காட்சிக்கு வாங்க – கவுதம் மேனன் வேண்டுகோள்
கவுதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், சிம்பு, சித்தி இட்னானி மற்றும் பலர் நடிப்பில் நாளை செப்டம்பர் 15ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ள படம் 'வெந்து தணிந்தது காடு'. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுவதால் படத்திற்கு அதிகாலை 5 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு சில தியேட்டர்களைத் தவிர பெரும்பாலான தியேட்டர்களில் அதிகாலை காட்சிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.
பொதுவாக அதிகாலை காட்சிகளுக்கு படம் பார்க்கப் போகும் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் போவார்கள். அவ்வளவு சீக்கிரம் வந்து படம் பார்க்கும் போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் அந்தப் படம் அமைந்துவிட்டால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். அதே சமயம் படம் கொடுமையாக அமைந்துவிட்டால் அவ்வளவுதான். வெளியில் வந்து 'மைக்' வைத்துக் கொண்டு 'ஆடியன்ஸ் ரிப்போர்ட்' கேட்கும் யு டியூபர்களிடம் தங்கள் துயரத்தைக் கொட்டித் தீர்க்கிறார்கள்.
இப்படிப்பட்ட அதிகாலை காட்சிக்கான ரசிகர்களின் கருத்துக்கள் வைரலாகி அந்தப் படத்திற்கு எதிர்மறையாக அமைந்து படத்தை ஒரே நாளில் சாய்த்துவிடுகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் 'லைகர்'.
எனவே, இப்போதெல்லாம் அதிகாலை காட்சி என்றாலே பல இயக்குனர்கள் கதிகலங்கிப் போய்விடுகிறார்கள். அந்த விதத்தில் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் இயக்குனராக கவுதம் மேனன் அது பற்றி சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில், “டிரைலரை வைத்து ரசிகர்களை ஏமாற்றத் திட்டமிடவில்லை. இந்தப் படத்தில் என்ன 'மூடு' இருக்கிறதோ, அதைத்தான் படத்திலும் வைத்திருக்கிறோம். தியேட்டருக்கு வந்தால் அது எல்லாத்தையும் மறந்து, ஒரு நல்ல படம், ஒரு உலகத்துக்குள்ள நுழையப் போறோம், அதை சொல்றதுக்கு கொஞ்சம் டைம் ஆகி ஒரு இடத்துக்குப் போகும். மத்த எல்லாத்தையும் மறந்துட்டு வந்து படம் பாருங்க. அதிகாலை 5 மணி காட்சிக்கு வந்தீங்கன்னா நைட்டு தூங்கிட்டு வாங்கன்னு சொல்றோம்,” எனப் பேசியுள்ளார்.
கவுதம் மேனனின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி, விதவிதமான மீம்ஸ்கள் வரை சென்று கொண்டிருக்கிறது.