லண்டன், :மறைந்த பிரிட்டன் ராணியின் உடல், அவர் நீண்ட காலமாக வசித்து வந்த பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து நேற்று புறப்பட்டது. இறுதிச் சடங்கு நடக்கும் வரை, லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் ஹாலில் உடல் வைக்கப்பட்டிருக்கும்.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத், 96, வயது மூப்பு காரணமாக சமீபத்தில் உயிரிழந்தார். அவருடைய மகன் மூன்றாம் சார்லஸ், நாட்டின் மன்னராக பொறுப்பேற்றார்.
ஸ்காட்லாந்தில் உயிரிழந்த ராணியின் உடல், அரச வழக்கப்படி, பல இடங்களில் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ராணி நீண்ட காலமாக வாழ்ந்த பக்கிங்ஹாம் அரண்மனையில் வைக்கப்பட்டிருந்தது.இறுதிப் பயணமாக, அரண்மனையில் இருந்து, 2 கி.மீ., தொலைவில் உள்ள பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் ஹாலுக்கு அவருடைய உடல் அடங்கிய சவப்பெட்டி நேற்று புறப்பட்டது.குதிரைகள் பூட்டிய, பீரங்கி வாகனத்தில் சவப் பெட்டி வைக்கப்பட்டுஇருந்தது.
இந்த இறுதிப் பயணத்தில், மன்னர் மூன்றாம் சார்லஸ், அவருடைய மகன்கள் வில்லியம், ஹாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.வரும், 19ம் தேதி ராணியின் உடலடக்கம் நடக்க உள்ளது. வெஸ்ட்மினிஸ்டர் ஹாலில் இருந்து வெஸ்ட்மினிஸ்டர் சர்ச்சுக்கு சவப்பெட்டி எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement