பார்வையை இழக்கப் போகும் குழந்தைகள்; உலகை சுற்றிக் காட்ட முடிவெடுத்த பெற்றோர்!

நம்மில் பலர் வெவ்வேறு காரணங்களுக்காக உலகைச் சுற்றி பார்க்க வேண்டும் என்று எண்ணியிருப்போம். ஆனால் கனடாவைச் சேர்ந்த தம்பதியினர் தங்களின் மூன்று குழந்தைகள் பார்வையை இழக்கும் முன்பு அவர்களுக்கு உலகை சுற்றிக் காட்ட வேண்டும் என்று எண்ணி பயணத்தை மேற்கொண்டுள்ள சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடைச் செய்திருக்கிறது.

கனடாவைச் சேர்ந்த செபாஸ்டியன் பெல்டியர், எடித் லேமே என்ற தம்பதிக்கு நான்கு குழந்தைகள், அதில் மூன்று குழந்தைகள் ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா என்ற அரிய வகை கண் குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளனர். மரபணு ரீதியாக ஏற்படும் பாதிப்பிற்கு முழுமையாக சிகிச்சை இல்லை. இது காலப்போக்கில் பார்வை இழப்பு அல்லது பார்வைக் குறைபாடை ஏற்படுத்தும். இத்தம்பதியினரின் மூத்த குழந்தையான மியாவுக்கு மூன்று வயதாக இருந்தபோது பாதிப்புக்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்திருக்கிறது.

பிறகு அவர்களின் மற்ற குழந்தைகளான 7 வயதுடைய கொலினுக்கும் 5 வயதுடைய லாரன்ட்க்கும் இப்பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அக்குழந்தைகளில் 9 வயதுடைய லியோ மட்டுமே இந்த பாதிப்பில் இருந்து தப்பித்துள்ளார். ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா என்ற இந்த பாதிப்பிற்கு எந்த ஒரு சிகிச்சையும் இல்லாததால் வருங்காலத்தில் அவர்களுக்கு பார்வை இழப்பு ஏற்படும் என்று எண்ணி தங்களது குழந்தைகள் பார்வையை இழப்பதற்கு முன் உலகத்தை சுற்றி காண்பிக்க முடிவு செய்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் பயணத்தைத் தொடங்கிய இவர்கள் பல நாடுகளுக்கு சென்றுள்ளனர். விரைவில் அவர்கள் இந்தோனேசியா, ரஷ்யா, சீனா போன்ற இடங்களுக்கும் பயணிக்க முடிவு செய்துள்ளனர். இது குறித்து பேசிய பெல்டியர், எடித் தம்பதியினர், “அவர்கள் வாழ்க்கையின் நடுப்பகுதியில் பார்வையற்றவர்களாக மாற வாய்ப்பு இருப்பதால், அவர்களுக்கு எங்களால் இயன்ற சிறந்த மற்றும் அழகான சில விஷயங்களை கொடுக்க நினைக்கிறோம்” என்று கூறியிருக்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.