பாலா அலுவலகம் முன் தர்ணா செய்த பிதாமகன் தயாரிப்பாளர்
சத்யராஜ் நடித்த என்னம்மா கண்ணு, லூட்டி, விபரமான ஆளு, உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் வி.ஏ.துரை. இவர் 2003ம் ஆண்டு பாலா இயக்கத்தில் விக்ரம் சூர்யா, லைலா, சங்கீதா நடித்த பிதாமகன் படத்தை தயாரித்தார். அன்றைய தேதியில் பெரிய பட்ஜெட்டில் தயாரான இந்த படம் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது, விருதுகளை குவித்தது. ஆனால் தயாரிப்பாளருக்கு லாபம் தரவில்லை. இதன் காரணமாக வி.ஏ.துரைக்கு அடுத்து ஒரு படம் இயக்கித் தருவதாக பாலா கொடுத்த உத்தரவாதத்தை தொடர்ந்து பாலாவுக்கு வி.ஏ.துரை 10 லட்சம் ரூபாய் முன்பணமாக கொடுத்துள்ளார்.
ஆனால் பாலா படம் இயக்கி கொடுக்கவில்லை. முன் பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. பல முறை திருப்பி கேட்டும் பாலா அதற்கு செவி சாய்க்கவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது பெரும் பொருளாதார சிக்கலில் இருக்கும் வி.ஏ.துரை பழங்குடி என்ற படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.
அவர் நேற்று பாலாவின் அலுவலகத்திற்கு சென்று பணத்தை திருப்பி கேட்டுள்ளார். பாலாவின் உதவியாளர்கள், அவரை அலுவலகத்தில் இருந்து வெளியே தள்ளியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வி.ஏ.துரை, பாலா அலுவலக வாசலில் நின்று தர்ணா செய்துள்ளார். போலீஸ் வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து கேள்விப்பட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் துரையுடன் தொடர்பு கொண்டு பேசி தர்ணாவை கைவிடுங்கள், பாலாவுடன் பேசி இதற்கொரு தீர்வு காணலாம் என்று கூறியதை தொடர்ந்து துரை அங்கிருந்து சென்றுள்ளார். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசில் இரு தரப்பும் புகார் அளிக்கவில்லை.