அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமின் தலைவர் அசாதுதீன் ஒவைசி வகுப்புவாத வன்முறைகள், வேலைவாய்ப்பின்மை உட்பட பல்வேறு பிரச்னைகளுக்கெதிராக மத்தியில் ஆளும் பா.ஜ.க-வைத் தொடர்ச்சியாக விமர்சித்துவருகிறார். மேலும், நேற்று முன்தினம் வழங்கப்பட்ட ஞானவாபி மசூதி வழக்கின் தீர்ப்பு குறித்துகூட, `1,991 வழிபட்டுத் தலங்கள் சட்டத்துக்கு எதிரானது இந்தத் தீர்ப்பு’ எனக் கூறினார். இந்த நிலையில் ஒவைசி, பிரதமர் மோடியை, சிறுத்தையுடன் ஒப்பிட்டு விமர்சித்திருக்கிறார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு இரண்டுநாள் பயணமாக வந்த ஒவைசி, பத்திரிகையாளர்களிடம் “நம்முடைய நிலப்பரப்பைச் சீனா ஆக்கிரமித்திருப்பது மற்றும் வேலையில்லா திண்டாட்டம் பற்றிக் கேட்டால், மோடி ஜி சிறுத்தையைவிடவும் வேகமாக ஓடுகிறார். இதுபோன்ற விஷயங்களில் அவர் மிகவும் வேகமாக இருக்கிறார். ஆனால், நாங்கள் அவரை மெதுவாகத்தான் செல்லச் சொல்கிறோம்” என மறைமுகமாக மோடியை விமர்சித்தார்.
இருப்பினும் திடீரென மோடியை சிறுத்தையுடன் ஒப்பிட்டுக் கூறியதற்குக் காரணமும் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது மோடியின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் தேதியன்று, இந்தியாவில் சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தை மத்தியப் பிரதேசத்திலுள்ள குனோ தேசிய பூங்காவில் மோடி தொடங்கிவைக்கவுள்ளார். மேலும் மோடி, அன்றைய தினமே வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 8 சிறுத்தைகளை குனோ தேசிய பூங்காவில் விடுவிக்கவும் உள்ளார்.