எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கம் எல்லோரும் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடும் என அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் பிறகு பேட்டியளித்துள்ளார்.
சென்னை அசோக் நகர் அதிமுகவின் மூத்த நிர்வாகி பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி.பிரபாகர் முன்னாள் அமைச்சர் கு.பா.கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று இருந்தனர். செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், ஜெயலலிதா, எம்ஜிஆர் காலகட்டத்திலேயே கட்சிக்காக பாடுபட்டவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம் என்றார்.
நீதிமன்ற தீர்ப்பு பின்னடைவா என்ற கேள்விக்கு? நாங்கள் முழுமையாக நம்புவது தொண்டர்களைத்தான். தொண்டர்கள் எப்படி இருக்க வேண்டும் என நினைக்கிறார்களோ அதன்படி எங்களுடைய செயல்பாடு இருக்கும் என்றார். எல்லோரும் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறீர்களா ? என்றதற்கு, எம்ஜிஆர் உருவாக்கிய இந்த இயக்கம், அனைவரும் ஒன்றுபட்டு இயங்க வேண்டும் என்பதுதான். அதுதான் எங்களுடைய இதய பூர்வமான ஏற்பாடும் கூட என்றார்.
உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை எப்படி இருக்கும்? என்றதற்கு, பொறுத்திருந்து பாருங்கள்! அதிமுக கட்சி அலுவலகம் செல்வீர்களா? என்றதற்கும் பொறுத்திருந்து பாருங்கள் என்று பதில் அளித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM