விசாகப்பட்டினத்தை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு ரயிலில் 28 வயது கர்ப்பிணி பயணித்துள்ளார். அப்பொழுது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், என்ன செய்வது என்று தெரியாமல் ரயில் பயணிகள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அப்பொழுது அந்த பெண் கத்திய சத்தம் கேட்டு பக்கத்து கோச்சில் இருந்து சுவாதி ரெட்டி என்ற 23 வயது பெண் ஓடிவந்து விசாரித்துள்ளார். அவருக்கு பிரசவ வலி என்பது அவர்களுக்கு தெரியவில்லை. காரணம், மருத்துவர் வேறு ஒரு தேதியை கொடுத்துள்ளார்.
எனவே பிரசவ வலி என்பது தெரியாமல் அந்த பெண் கத்தி கொண்டிருப்பதை சுவாதி கண்டறிந்தார். பின்னர், அவருக்கு குழந்தை பிறக்கப் போகிறது என்று எச்சரித்து மற்றவர்களை வெளியில் செல்லும்படி கேட்டுள்ளார். ஆனால் அந்த பெண்ணை உறவினர்கள் பிரசவம் பார்க்க அனுமதிக்கவில்லை.
அப்போது தான் ஒரு மருத்துவ மாணவி என்றும், சிலருக்கு பிரசவம் பார்க்கும் பொழுது உடனிருந்து உதவிகள் செய்ததில் பயிற்சி எடுத்திருப்பதாகவும், அவர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பிரசவம் பார்க்க அனுமதித்தனர். பின்னர், சுவாதி துணிச்சலாக தனக்கு இருந்த அனுபவங்களை கொண்டு அந்த பெண்ணை கையாண்டதில் குழந்தையும் பிறந்தது. ரயிலில் பயணித்த பெண்ணுக்கு தெய்வம் போல உதவி செய்த மருத்துவ மாணவி குறித்த புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் வெளியாகி பாராட்டுகளை பெற்று வருகிறது.