சென்னை: மாணவர்களை நல்வழிப்படுத்தும் ‘சிற்பி’ திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘சிறுவர்களை சமூக ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டியது நம் கடமை’ என்று வலியுறுத்தினார்.
பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் சென்னை மாநகர காவல்துறை சார்பில் ‘சிற்பி’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், சென்னை மாநகராட்சியில் 100 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் தலா 50 மாணவர்களுக்கு புதிய சீருடை மற்றும் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. சிறார் குற்றங்களை தடுக்கவும், போதைப்பொருள் உள்ளிட்ட தீய பழக்கங்களை தவிர்க்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்ற விழாவில், இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்காக தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சீருடைகளையும், பள்ளிகளில் ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்கு பணி நியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கினார். பின்னர், மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
காவல்துறையை மக்களின் நண்பன் என்கிறோம். அதற்கேற்ப, மக்கள் அனைவரும் காவல்துறையின் நண்பர்களாக இருக்க வேண்டும். காவல்துறையும் மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் குற்றங்கள் குறையும் என்பதைவிட, குற்றங்களே நிகழாமல் தடுக்கப்படும். ‘சிற்பி’ என்ற புதிய முன்னெடுப்பை காவல்துறை இன்று உருவாக்கியுள்ளது. சிற்பி என்பதற்கு Students in Responsible Police Initiatives (SIRPI) என்பதுதான் பொருள். பொறுப்புமிக்க மாணவர்களை உருவாக்கும் இத்திட்டத்தை, கடந்த ஆண்டு செப்.13-ம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தேன். அப்போது ரூ.4.25 கோடியில் இதை செயல்படுத்த இருப்பதாக அறிவித்தேன்.
சென்னையில் உள்ள 100 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த தலா 50 மாணவர்கள் பங்கேற்கும் வகையில் திட்டம் தொடங்கப்படுகிறது. சிறுவர்களை இளமைக்காலம் முதலே பொது ஒழுக்கம் உள்ளவர்களாகவும், சமூகப் பொறுப்பு உள்ளவர்களாகவும் ஆக்க இந்த திட்டம் பயன்படும். சிறார் குற்றங்களை கட்டுப்படுத்த தமிழக காவல்துறை சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.
குடும்ப உறுப்பினர்களின் கவனக்குறைவு, போதிய வருவாய் இல்லாமை, ஆதரவின்றி வளர்வது, வேலைவாய்ப்பின்மை போன்றவையே சிறுவர்கள் குற்றச்செயலில் ஈடுபட காரணமாக உள்ளன. இவற்றை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலம் அவர்கள் குற்றச்செயலில் ஈடுபடுவதை தடுக்க முடியும். இதுதான் இத்திட்டத்தின் நோக்கம்.
வளர்ச்சி இருந்தாலும், சமூக பிரச்சினைகள் அதிகமாகி வருவதை கவனித்து தடுக்க வேண்டும். போதைப்பொருள் ஒழிப்பு, குடிப்பழக்கத்துக்கு எதிரான நடவடிக்கைகள், சட்டம் சார்ந்த விழிப்புணர்வு, அரசு சார்ந்த, அரசு சாரா அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்துதல், சுய ஆளுமைத்திறனை மேம்படுத்துதல், பெற்றோர் பேச்சை மதித்து நடத்தல், பொதுமக்களுடன் தொடர்பு, இளம் வயதிலிருந்தே போக்குவரத்து விதிகளை கடைபிடிக்கச் செய்தல், மாநிலத்தின் செழுமை, வளர்ச்சியை கண்டு பெருமை கொள்ளச் செய்தல் ஆகிய பண்புகளை சிறார்களிடம் உருவாக்க வேண்டும்.
இத்திட்டத்துக்கு 100 பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் 2,764 மாணவர்களும், 2,236 மாணவிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பள்ளியிலும் 2 ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பள்ளிகளில் ஒவ்வொரு புதன்கிழமையும் மாணவ, மாணவிகள் இரு ஒருங்கிணைப்பு அதிகாரிகளின் முன்னிலையில் கூடுவார்கள். அவர்களுக்கான வகுப்புகளை காவல் அதிகாரிகள், துறை சார் நிபுணர்கள் நடத்துவார்கள். இதற்காக புத்தகம் ஒன்றும் வழங்கப்படும். வகுப்புகளில் அவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகள் வழங்கப்படும். மேலும், நிர்ணயிக்கப்பட்ட 8 இடங்களுக்கு மாணவர்கள் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என காவல்துறை அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர்.
சிறுவர்களை சமூக ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டியது நம்கடமை. அப்படி உருவாகும் இளைஞர்கள் சிறந்த சமுதாயத்தை உருவாக்குவார்கள். இந்த பயிற்சி காலத்தில் மனித உரிமை மீறல்கள் இருக்கக் கூடாது. அவர்கள் தன்மானத்துக்கு இழுக்கு ஏற்படும் வகையில் யாரும் நடக்கக் கூடாது. எவ்விதமான புகாரும் வராமல் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
மாற்றம் ஏற்படும்: முன்னதாக அனைவரையும் வரவேற்று பேசிய தலைமைச் செயலர் வெ.இறையன்பு, “இத்திட்டத்தில் மாணவர்களுக்கு காவல்துறையினரால் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படும். போதை ஒழிப்பில் இருந்து பல்வேறு நன்னடத்தைகளை கற்பார்கள். தங்களைத் தாங்களே மேம்படுத்திக் கொள்வார்கள். இது மற்ற மாணவர்களிடம் நாமும் தூய்மையானவர்களாக திகழ வேண்டும், திறன் பெற வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். அதன்மூலம் அவர்களும் தங்களை மேம்படுத்திக் கொள்வர். 100 பள்ளிகளிலும் இப்பழக்கம் ஏற்படும்போது, தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாற்றம் ஏற்படும். எதிர்காலத்தில் நாட்டுக்கு பங்களிப்பவர்களாகவும், சட்ட திட்டத்தை மதிப்பவர்களாகவும் திகழ்வார்கள். மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை இந்த சிற்பி திட்டம் விதைக்கிறது” என்றார்.
விழாவில் அமைச்சர்கள், மு.பெ.சாமிநாதன், பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை மேயர் ஆர்.பிரியா, உள்துறை செயலர் க.பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், பள்ளிக்கல்வி செயலர் காகர்லா உஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.