மேற்கு வங்கத்தில் ஊழல் குற்றச்சாட்டில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் விசாரிக்கப்பட்டதற்குப் பிறகு, பல அரசியல் முன்னெடுப்புகளை பா.ஜ.க செயல்படுத்திவருகிறது. அதைத் தொடர்ந்த நேற்று கொல்கத்தாவில் ‘நபன்னா அபிஜன்’, அதாவது ஊழலுக்கு எதிரான போராட்டம் என்ற அணிவகுப்பு திட்டமிடப்பட்டது. மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பா.ஜ.க உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கலந்துகொள்ள பா.ஜ.க ஏழு ரயில்களை வாடகைக்கு எடுத்திருந்தது.
இந்த நிலையில், நபன்னா அபிஜன் பேரணியின் போது காவல்துறைக்கும் பா.ஜ.க தொண்டர்களுக்கு மத்தியில் கலவரம் வெடித்திருக்கிறது. இதில் பல காவல்துறை அதிகாரிகளும், பா.ஜ.க தொண்டர்களும் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வெளியான தகவலில், போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த காவல்துறை, தண்ணீரையும், கண்ணீர்ப் புகைக் குண்டையும் பயன்படுத்தியிருக்கிறது. அதைத் தொடர்ந்து, பா.ஜ.க தொண்டர்கள் காவல்துறையின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.
கும்பல் தாக்குதலின் காரணமாக பல காவல்துறையினரின் பாதுகாப்புக் கவசம் இரண்டாக உடைந்திருக்கிறது. இந்த தாக்குதலில் டெப்ஜித் சாட்டர்ஜி என்ற அதிகாரியின் கை உடைக்கப்பட்டிருக்கிறது. கொல்கத்தாவின் புர்ராபஜார் பகுதியில் உள்ள காவல் நிலையம் அருகே காவல்துறை வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டிருக்கிறது.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து, மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, அக்கட்சியின் ஹூக்ளி எம்.பி லாக்கெட் சட்டர்ஜி, மூத்த தலைவர் ராகுல் சின்ஹா மற்றும் பல தலைவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ஷிஷிர் பஜோரியா, முன்னாள் எம்.பி ஸ்வபன் தாஸ்குப்தா மீது காவல்துறை சேற்றை வீசியதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.
பேரணிக்கு முன்னதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜாய் பிரகாஷ் மஜும்தார், ” ரயிலை வாடகைக்கு எடுத்து, பெரும் பணம் செலவழித்து அழைத்து வரப்படும் பா.ஜ.க தொண்டர்கள், மக்களின் கவனத்தைப் பெற, பிரச்னையைத் தூண்ட முயற்சி செய்யலாம்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது.