மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில், பாரதிய ஜனதா பேரணி, வன்முறையில் முடிந்தது. காவல்துறை வாகனம் தீக்கிரையாக்கப்பட்டது. வன்முறை தொடர்பாக பாஜக எம்எல்ஏவும் எதிர்க்கட்சித்தலைவருமான சுவெந்து அதிகாரி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மேற்குவங்க அரசை கண்டித்து புதிய தலைமைச்செயலகம் நோக்கி பாரதிய ஜனதா கட்சி பேரணி அறிவித்திருந்தது. அனுமதியின்றி நடத்தப்பட்ட பேரணியை தடுக்கும் வகையில், நார்த்24 பர்கானாஸ், ‘ஹவுரா உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்திருந்தனர். ஆயினும் தடுப்புகளை மீறி பேரணியாக வந்த பாஜகவினருக்கும் காவல்துறையினருக்கும், இடையே மோதல் ஏற்பட்டது. தடுப்புகளை மீற முற்பட்ட பாஜகவினர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு கலைக்கப்பட்டனர். வன்முறை சம்பவங்களில் காவல்துறை வாகனம் தீக்கிரையாக்கப்பட்டது.
இதேபோல, ரயில்கள் மூலம் வந்த பாரதிய ஜனதா கட்சியினர் தடுத்து நிறுத்தப்பட்டனர். தடையை மீறி பேரணி சென்ற நந்திகிராம் பாஜக எம்எல்ஏ சுவெந்து அதிகாரி, எம்.பி. லாக்கெட் சாட்டர்ஜி (LOCKeT) உள்ளிட்டோர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சுவெந்து, `மேற்குவங்கத்தை வடகொரியா போல முதலமைச்சர் மம்தாபானர்ஜி மாற்றிவிட்டார்’ எனக் குற்றம்சாட்டினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM