ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்கிறது ஜேர்மனி.
ஆயுதங்கள் வழங்கவில்லை என உக்ரைனும், ஆயுதங்கள் வழங்குவதால் இரு நாடுகளுக்கிடையிலான உறவில் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக ரஷ்யாவும் ஜேர்மனி மீது குற்றம் சாட்டிவருகின்றன.
இராணுவ ஹார்ட்வேர் வழங்கக் கோரும் உக்ரைனின் கோரிக்கைகளை ஜேர்மனி அலட்சியப்படுத்துவதாக உக்ரைன் அதிகாரிகள் ஜேர்மனி மீது தங்கள் கோபத்தைக் காட்டியுள்ளார்கள்.
இது தொடர்பாக உக்ரைன் வெளியுறவு அமைச்சரான Dmytro Kuleba வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஜேர்மன் அதிகாரிகள் பயந்துபோய் இருக்கிறார்கள், ஏதேதோ சாக்குப்போக்குகள் சொல்கிறார்கள், ஆயுதங்கள் வழங்க மறுக்கிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மறுபக்கத்தில், உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதன் மூலம் ஜேர்மனி சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டது என ரஷ்யா எச்சரித்துள்ளது.
பெர்லினிலுள்ள ரஷ்யாவுக்கான தூதர், ஜேர்மனி சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டது என்றும், இரு நாடுகளின் உறவை சீராக்குவதில் பல ஆண்டுகளாக அந்நாடு ஆர்வம் காட்டவில்லை என்றும், இருதரப்பு உறவுகளை அழித்துவருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆக, ரஷ்யா ஒருபக்கம் உக்ரைன் மறுபக்கம் என ஜேர்மனி மீது தத்தம் கோபத்தைக் காட்ட, என்ன செய்வதென தெரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்கிறது ஜேர்மனி.