புதுச்சேரி: ராகுல் டி-சர்ட் திருப்பூரில் தயாரிக்கப்பட்டது; நமது தேசிய கொடியை சீனாவில் இருந்து ஒன்றிய அரசு வாங்கியுள்ளது என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இந்திய ஒற்றுமை நடை பயணத்தை தொடங்கியுள்ள ராகுல் காந்தியை பாஜக கேலி செய்தது. ராகுல் காந்தி, நடை பயணத்தில் பங்கேற்கும் போது அணிந்திருந்த டி- சர்ட்டின் விலை 41,000 ரூபாய்க்கும் அதிகமாக இருப்பதாகக் கூறி பாஜக விமர்சித்திருந்தது. ராகுல் காந்தி மற்றும் அவர் அணிந்திருந்த டி-சர்ட்டின் விலையைக் குறிப்பிடும் வகையில் இரண்டு புகைபடங்களை பாஜக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. புளூபெர்ரி டி-சர்ட்டின் விலை ரூ.41,257 என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், ராகுல் காந்திக்கு ஆதரவாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ராகுல், தனது ஆடைகளுக்குப் பணம் செலுத்த அரசு நிதியைப் பயன்படுத்தவில்லை என்றும் யாத்திரையால் பாஜக அரண்டு போய் இருப்பதாகவும் காங்கிரஸ் தெரவித்துள்ளது. ராகுலின் ஆடைகளின் விலை எப்படிக் காட்டப்பட்டதோ, அதே போன்று மோடியின் ஆடைகளின் விலையையும் காட்ட வேண்டும் எனவும் சிலர் விமர்சனம் செய்திருந்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து பேட்டியளித்த புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ராகுல் டீ-சர்ட் திருப்பூரில் தயாரிக்கப்பட்டது; நமது தேசிய கொடியை சீனாவில் இருந்து ஒன்றிய அரசு வாங்கியுள்ளது என்று விமர்சனம் செய்திருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி தினமும் 3 முறை உடை மாற்றுகிறார், அவரது உடை ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருகிறது. அமைச்சர் அமித்ஷா பயன்படுத்தும் துண்டு வெளிநாட்டில் இருந்து வருகிறது. எங்களது தலைவர் உடை பற்றி பேச பாஜகவுக்கு எந்த தகுதியும் இல்லை என நாராயணசாமி ஆவேசமாக தெரிவித்திருக்கிறார்.