‘வைரக்கல் கடத்தலுக்குத் துணைபோகும் வனத்துறை அதிகாரி’ என விவசாயிகள் சங்கமும், ‘அதிகாரிமீது குற்றம்சாட்டும் கும்பலைக் குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும்’ என்று ஊர்ப் பொதுமக்கள் தரப்பிலுமாக எதிரெதிராக போஸ்டர் யுத்தம் நடந்துவருகிறது நெல்லை மாவட்டத்தில்!
மேற்குத் தொடர்ச்சி மலையில், களக்காடு புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள செங்கல்தேரி உள்ளிட்ட பகுதிகளில், சட்டவிரோதமாக வைரம் தேடிவருபவர்களை வனத்துறையினர் பிடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இந்த நிலையில், ‘தடைசெய்யப்பட்ட செங்கல்தேரி பகுதிக்கு சட்ட விரோதமாகச் சமூக விரோதிகளை அனுப்பிவரும் களக்காடு புலிகள் காப்பகத் துணை இயக்குநர் ராமேஸ்வரன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதையடுத்து, ‘சமூகவிரோதச் செயல்களுக்குத் துணைபோகச்சொல்லி துணை இயக்குநர் ராமேஸ்வரனை மிரட்டும் கும்பல்மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வனத்துறையினருக்கு ஆதரவாகப் பொதுமக்கள் பெயரில் பதிலடி போஸ்டர்கள் ஒட்டப்பட… களக்காட்டில் பரபரப்பு பற்றிக்கொண்டது.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவரான பெரும்படையாரிடம் கேட்டோம். “களக்காடு மலைப்பகுதியில், வைரக்கல் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட பலரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்புகூட வைரம் திருடும் கும்பலுக்கு உடந்தையாக இருந்ததாக ஒரு ரேஞ்சரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில், தடைசெய்யப்பட்ட செங்கல்தேரி பகுதிக்குள் சமீபத்தில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதை விவசாயிகளே நேரில் பார்த்திருக்கிறார்கள். மேலும் வனத்துறையினரின் உதவியால் வைரக்கல் கடத்த முயற்சி நடப்பதாகத் தகவல் கிடைத்ததால், அது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி போஸ்டர் ஒட்டினோம். ஆனால், அதிகாரி ராமேஸ்வரனும் எங்களுக்கு எதிராக போஸ்டர் ஒட்ட ஏற்பாடு செய்கிறார். அதனால்தான் அவர்மீது எங்களுக்குச் சந்தேகம் வலுக்கிறது” என்றார் படபடப்பாக.
இந்தப் பிரச்னை குறித்துப் பேசும் வனத்துறை அதிகாரிகள் சிலர், “ராமேஸ்வரன் துணை இயக்குநராகப் பொறுப்பேற்ற பிறகு, வனத்துக்குள் யாரையும் அனுமதிப்பதில்லை. இதனால், அதிருப்தியில் இருப்பவர்கள், அவருக்கு வைரக்கல் திருடும் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக போஸ்டர் ஒட்டினார்கள். அதற்காக, ராமேஸ்வரனும் பதிலுக்கு ஆள்வைத்து போஸ்டர் ஒட்டியிருக்கக் கூடாது” என்றனர்.
இதையடுத்து, ‘களக்காடு புலிகள் காப்பகத் துணை இயக்குநர்’ ராமேஸ்வரனிடம் இந்த விவகாரம் குறித்துக் கேட்டபோது, “மேற்குத் தொடர்ச்சி மலையில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள்மீது நான் கடுமையான நடவடிக்கை எடுப்பதால், வேட்டையில் ஈடுபடுவோர், மரம் வெட்டுவோர் மற்றும் லோக்கல் அரசியல்வாதிகள் சிலர் என்மீது ஆத்திரத்தில் இருக்கிறார்கள். எனவே, எனக்கு எதிராக போஸ்டர் ஒட்டினார்கள். அதேநேரம், என் செயல்களைப் பார்த்து திருப்தியிலிருக்கும் உள்ளூர் மக்களில் சிலர், எனக்கு ஆதரவாகவும் போஸ்டர் ஓட்டினார்கள். மற்றபடி அவர்கள் யார் என்பதுகூட எனக்குத் தெரியாது” என்றார்.
என்னதான் நடக்கிறது செங்கல்தேரி பகுதிக்குள்?