தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்குக்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். ஆவின் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்ட பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அந்தக் குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை, “இன்றைய தினம் விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வு செய்ததில் பள்ளி மற்றும் ஆதிதிராவிடர் விடுதிகள் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றன. ஆதிதிராவிடர் துறை செயலாளர் ஜவகரிடம் இது குறித்துப் பேசினேன். ஆனந்த் ஐ.ஏ.எஸ் அவர்களை ஆய்வு செய்ய அனுப்புவதாகச் சொல்லியிருக்கிறார்.
கப்பூர் பள்ளியில் உள்ள கணினி மையம் செயல்படாத நிலையில் இருக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும். கடந்த 2018-19-ம் ஆண்டுகளில் விழுப்புரம் ஆவினுக்கு இயந்திரம் வாங்கி செயல்படுத்தாமல் வைத்திருந்ததால் அரசுக்கு 26.88 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
மேலும், மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய சுமார் ரூ.11 கோடி மானியமும் கிடைக்கவில்லை. அதேபோல், 1 KV சோலார் மின் உற்பத்தி செய்ய 1.2 லட்சம்தான் செலவாகும் எனக் கூறப்படுகிறது. ஆனால், கடந்த ஆட்சியில் 3 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். அதனால் சுமார் 54 லட்சம் வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், 2020-21 காலக்கட்டத்தில் ரூ.25 கோடியில் கட்டப்பட்ட தளவானூர் தடுப்பணை அடுத்த 3 மாதங்களில் உடைந்திருக்கிறது. இப்போது அதை ரூ.40 கோடிக்கு மேல் திட்ட மதிப்பீடு செய்து பணிகளை தொடங்க இருக்கிறார்கள்” என்றார்.