புதுடெல்லி: வௌிநாடுகளில் இருக்கும் இந்திய அரசு அலுவலகங்களில் இந்தியை ஊக்குவிக்க குழு அமைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இன்று முதல் இரண்டு நாட்களுக்கு நாடு முழுவதும் இந்தி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தி மொழி திணிப்பு விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்தி மொழியை தேசிய மொழியாக ஏற்று அனைத்து மாநிலங்களும் கற்க வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேசியிருந்தார். இதற்கு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். கடந்த ஆண்டும், இந்தி தினத்திற்கு (செப். 14) எதிராக பல மாநிலங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
கர்நாடகாவில் இந்தி நாள் கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி, கர்நாடகா முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதேநேரம் இன்று குஜராத் சென்றுள்ள அமித் ஷா, சூரத்தில் இன்று தொடங்கும் இந்தி தின இரண்டு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையை ஆற்றுகிறார். கடந்தாண்டு டெல்லியில் இந்தி தின நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு குஜராத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒன்றிய அரசு, நாடு முழுவதும் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்கள், வங்கிகளில், ரயில் நிலையங்களில் இந்தி திணிப்புகளை செய்து வரும் நிலையில், வெளிநாடுகளில் செயல்படும் ஒன்றிய அரசின் அலுவலகங்களில் இந்தி திணிப்பு கொள்கையை பின்பற்றி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், ‘வெளிநாட்டில் உள்ள இந்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழியைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும். அலுவல் மொழிச் சட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள சிக்கல்களை நீக்க வேண்டும். அதற்காக கூட்டுக் குழுவை உருவாக்க வேண்டும். ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுடனும், வெளியுறவு அமைச்சகத்தின் ஒருங்கிணைப்புடனும் இந்தக் குழுக்கள் அமைக்கப்படும். வெளி நாடுகளில் உள்ள இந்தியத் தூதர்கள் அந்தந்த குழுவிற்கு தலைமை தாங்குவார்கள். இந்தியை ஊக்குவிக்க வெளிநாட்டில் பணியமர்த்தப்பட்ட மூத்த அதிகாரிகள், தகுதியான இந்தி மொழி நிபுணரை பரிந்துரைக்க வேண்டும். வெளிநாட்டில் உள்ள ஒவ்வொரு இந்திய அரசு அலுவலகங்களிலும், இந்தி தினத்தை கொண்டாட வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.