சென்னை: அண்ணா பிறந்த தினத்தையொட்டி மதுரையில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள மற்ற பள்ளிகளில், செப்.16 முதல் திட்டம் அமலாகிறது.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அரசாணைகள் வெளியீடு: அதன்படி, சில மாநகராட்சிகள், நகராட்சிகள், தொலைதூர கிராமங்களில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதல்கட்டமாக அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான வழிகாட்டுதல்களுடன் அரசாணைகள் வெளியிடப்பட்டன.
இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு, மதுரை நெல்பேட்டையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் நாளை மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதைத் தொடர்ந்து, காலை 8 மணி அளவில் அருகில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
ஆட்சியர்களுக்கு கடிதம்: இதுகுறித்து சமூக நலத்துறை செயலர் ஷம்பு கல்லோலிகர், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை செப்.15-ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார். அதன்பின், இத்திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள பிற பகுதிகள் அடங்கியுள்ள மாவட்டங்களில் செப்.16-ம் தேதி முதல் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர்களால் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில், ஏதேனும் ஒரு பள்ளியில், அமைச்சர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டு திட்டத்தை தொடங்கிவைக்க வேண்டும்.
திருச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கரூர் ஆகிய மாவட்டங்களில் ஊரகப் பகுதிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஒரு பள்ளியிலும், திருப்பூர், விருதுநகர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கிராமப்புற அல்லது மலைப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு முன்னுரிமை அளித்து ஒரு பள்ளியிலும், நீலகிரியில் மலைப்பகுதியில் ஒரு பள்ளியை தேர்வு செய்தும், மாவட்ட அளவிலான திட்ட தொடக்க விழாவை செப்.16-ம் தேதி நடத்த வேண்டும்.
ஒருங்கிணைப்பு அலுவலர்கள்: அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டத்தை தொடர்ந்து கண்காணித்து, ஒருங்கிணைப்பு பணிகள் மேற்கொள்ள உதவி இயக்குநர் நிலையில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மற்றும் வருவாய்த் துறையை சார்ந்த வருவாய் கோட்டாட்சியர்களை ஒருங்கிணைப்பு அலுவலர்களாக நியமிக்க வேண்டும்.
அனைத்துப் பள்ளிகளிலும் செப்.16-ம் தேதி இத்திட்டத்தை செயல்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் நேர்முக உதவியாளர் மூலம் சமூகநல இயக்குநருக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.