ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் மத்தியில் ஆளும் பாஜக விற்கும் எப்போதும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வரும் நிலையில், தனது கட்சியில் 10 எம்.எல்.ஏ.க்களை பாஜக விலைபேசி வருகிறது என அரவிந்த் கெஜ்ரிவால் பேசி இருப்பது அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப்பில் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க 10 சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக விலைபேசி வருவதாக அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றஞ் சாட்டியுள்ளார்.
டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சி நடைபெற உள்ள குஜராத் மாநில தேர்தலில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டு தேர்தல் வியூகங்கள் குறித்தும், பிரச்சாரங்கள் குறித்தும் அவ்வப்போது ஆலோசனை செய்து வருகிறார்.
இந்நிலையில் சமீப வாரங்களுக்கு முன்னர் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உட்பட ஆம் ஆத்மி கட்சியின் பல்வேறு டெல்லி சட்டமன்ற உறுப்பினர்களை பாரதிய ஜனதா கட்சி தலா 20 கோடி ரூபாய்க்கு விலை பேசியதாக பரபரப்பு குற்றச்சாட்டை ஆம் ஆத்மி கட்சி முன் வைத்தது. இதன் தாக்கம் இப்போது சற்றே குறைந்துள்ள நிலையில் மற்றொரு குற்றச்சாட்டை மீண்டும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்வைத்துள்ளார்.
அதில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் 10 சட்டமன்ற உறுப்பினர்களை பாரதிய ஜனதா கட்சி விலைபேசி வருவதாகவும் அவர்களை பாஜக வசம் இழுத்து பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி அரசை உடைக்க பாஜக முயல்வதாக குற்றம் சாட்டியுள்ளார். இது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.