புதுடில்லி, :வங்கிக் கடன் மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை நடத்திய சோதனையின்போது, தனியார் ‘லாக்கரில்’ பதுக்கப்பட்டிருந்த, 47 கோடி ரூபாய் மதிப்புள்ள 431 கிலோ தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.புதுடில்லியில் அமலாக்கத் துறை நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது:வங்கிகளில் போலி ஆவணங்கள் கொடுத்து, 2,296 கோடி ரூபாய் கடன் மோசடி செய்ததாக, ‘பரேக் அலுமினெக்ஸ்’ என்ற நிறுவனம் மீது புகார் வந்தது.
இது தொடர்பாக, 2018ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.வங்கிகளில் இருந்து வாங்கிய கடனை, பல்வேறு போலி நிறுவனங்களின் பெயரில் மாற்றி மோசடி நடந்துள்ளது தெரிய வந்தது. இது தொடர்பாக, ‘ரக் ஷா புல்லியன் மற்றும் கிளாசிக் மார்பெல்ஸ்’ நிறுவனங்களில் சோதனை செய்யப்பட்டது.அப்போது, தனியார் லாக்கருக்கான சாவிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன்படி, அந்த தனியார் லாக்கரை நடத்தும் நிறுவனத்தில் சோதனை செய்யப்பட்டது.முறையான அங்கீகாரம் எதுவும் இல்லாமல், போதிய ஆவணங்கள் பராமரிக்கப்படாமல், அங்கு 761 லாக்கர்கள் இருப்பது தெரிய வந்தது. இதில், மூன்று லாக்கர்கள், ரக் ஷா புல்லியன் நிறுவனத்துக்கு சொந்தமானவை.இந்த லாக்கர்களில் இருந்து, 91.5 கிலோ தங்கக் கட்டிகள், 152 கிலோ வெள்ளிக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ரக் ஷா புல்லியன் நிறுவனத்தில் இருந்து, 188 கிலோ வெள்ளிக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு 47 கோடி ரூபாய்.வழக்கு தொடர்பாக, இந்த நிறுவனங்களில், 205 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement