Doctor Vikatan: என் வயது 36. எனக்கு இயல்பிலேயே கோபமே வராது. யார் என்ன சொன்னாலும் எந்தப் பிரச்னை என்றாலும் கோபப்பட மாட்டேன். இதை மற்றவர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். எதற்குமே கோபப்படாத குணம் சரியானதுதானா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மனநல மருத்துவர் சுபா சார்லஸ்

எதற்குமே கோபப்படுவதில்லை என வெளிப்படையாகச் சொன்னதற்கு முதலில் பாராட்டுகள். அது சரிதானா என்பதை பிறகு பார்ப்போம். ஆனால் அது குறித்து உங்களுக்கு சின்னதாக ஒரு வருத்தம் இருப்பதையும் உங்கள் கேள்வி மறைமுகமாக உணர்த்துகிறது.
நீங்கள் எதற்கும் கோபப்பட மாட்டீர்கள் என்று தெரிந்து, உங்கள் எதிராளி உங்களிடம் இன்னும் சற்று கோபமாகப் பேசலாம், கத்தலாம்.
யாரையும் தொந்தரவு செய்யாமல் இருக்கும் ஓர் உயிரினத்தை நாம் வேண்டுமென்றே சீண்டினால் அது நம்மைத் தாக்க முயலும். ஐந்தறிவு ஜீவன்களுக்கும் இருக்கக்கூடிய இயற்கையான, இயல்பான குணம் அது.
ஒவ்வொரு செயலுக்கும் ஓர் எதிர்வினை உண்டு என்பது இயற்கையின் நியதி. இது மனவியலுக்கும் பொருந்தும். எந்த உயிரினமும் ஜடம்போல இருத்தல் ஆகாது. சூழலுக்கேற்ப ரியாக்ட் செய்ய வேண்டும். அதுதான் அது உயிருள்ள படைப்பு என்பதற்கான அடையாளமும்கூட.
பாக்டீரியாவோ, வைரஸோகூட சூழலுக்கேற்ப, தன் வாழ்வாதாரத்துக்காகத் தன்னை மாற்றிக்கொண்டே போவதைக் கேள்விப்படுகிறோம் அல்லவா? அப்போதுதான் அதனால் தன்னைத் தக்கவைத்துக்கொள்ள முடியும்.
எதற்குமே கோபப்படாத உங்கள் குணம் சரியா என்றால் சரியானதல்ல என்பதே என் பதில். அநீதி கண்டு பொங்க வேண்டும். நியாயத்துக்கெதிரான செயல்கள் நடக்கும்போது எதிர்க்க வேண்டும். அப்படியெல்லாம் செய்வதுதான் மனித இயல்பு. தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பொங்கிய பாரதிக்கும், அஹிம்சை வழியில் போராடிய காந்திக்கும்கூட கோபம் இருந்ததுதானே….

கோபப்படாத, அமைதியான குணம் நல்ல பண்பு என உங்களை நீங்களே சமாதானப்படுத்திக்கொள்கிறீர்கள். கோபப்பட வேண்டும் என்றதும் வன்முறையில் இறங்க வேண்டும் என்று அர்த்தமில்லை. உங்களுக்குத் தெரிந்து ஒரு தவறு நடக்கும்போது அதற்கு எதிராகக் குரல் கொடுக்கும் அளவுக்கு கோபம் இருக்க வேண்டியது அவசியம்.
கோபத்தை வன்முறையாகவோ, ஆக்ரோஷமாகவோ மட்டும்தான் வெளிப்படுத்த வேண்டும் என்றில்லை. அழுத்தமான வார்த்தைகளால் பதியவைக்கலாம். உறுதியாகச் சொல்லலாம். மாற்றுக் கருத்துகள் வருமோ, எதிராளிகள் என்ன சொல்வார்களோ, செய்வார்களோ என்றெல்லாம் யோசிக்கத் தேவையில்லை. உங்களுக்குச் சரியென பட்டதை சொல்லும் தைரியமும் தவறென படுவதைச் சுட்டிக்காட்டவும் தேவையான அடிப்படை கோபம் இருப்பதுதான் சரி.